சென்னை : த.வெ.க., தலைவர் விஜய், சென்னை பெரம்பூரில், தன் தேர்தல் பிரசாரத்தை நாளை மறுநாள் துவக்குகிறார்.
த.வெ.க., தலைவர் விஜய், சில மாதங்களுக்கு முன்பு வரை, பல்வேறு மாவட்டங்களில் சனிக்கிழமை தோறும் பிரசாரம் மேற்கொண்டார். கரூரில் நிகழ்ந்த கூட்ட நெரிசல் உயிர் பலி சம்பவத்துக்கு பின், அந்த பயண திட்டம் ரத்தானது. கட்சி நிர்வாகிகள் சந்திப்புகளை மட்டும் பல்வேறு நகரங்களில் மேற்கொண்டார்.
தற்போது, தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னை பெரம்பூர் தொகுதியில், விஜய் போட்டியட உளளார். இதையடுத்து, தன் தேர்தல் பிரசாரத்தை நாளை மறுநாள் சனிக்கிழமை காலை 10:00 மணிக்கு, பெரம்பூரில், விஜய் துவக்குகிறார். தொடர்ந்து, கொளத்துார், வில்லிவாக்கம், அண்ணாநகர், விருகம்பாக்கம் ஆகிய தொகுதிகளிலும் விஜய் பிரசாரம் செய்ய உள்ளார்.
இதற்கிடையே, சென்னை, கோயம்பேட்டில், தே.மு.தி.க., கட்சி அலுவலகத்தில் அமைந்திருக்கும் விஜயகாந்த் நினைவிடத்தில், விஜய் மரியாதை செலுத்த இருக்கிறார். தமிழகம் முழுதும், மொத்தம் 20 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் விதமாக, விஜயின் பிரசார திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கட்சி ஆரம்பித்த பின், முதல் தேர்தல் எதிர்கொள்ளும் விஜய், காங்கிரசுடன் கூட்டணி அமைக்க முயற்சி செய்தார். அதே நேரத்தில், விஜயின் தவெகவை தே.ஜ., கூட்டணிக்குள் கொண்டு வர, பா.ஜ., முயற்சி செய்தது. ஆட்சியில் பங்கு அளிப்பதாக விஜய் அறிவித்தும், எந்த கட்சியும் கூட்டணிக்கு வரவில்லை. எதுவுமே நடக்காத நிலையில், சட்டசபை தேர்தலில் தவெக தனித்து போட்டியிடுகிறது.
இந்நிலையில், 234 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கும், வேட்பாளர்களின் பெயர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுள்ளது, 115 வேட்பாளர்களை, முதல்கட்டமாக விஜய் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில், நாளை நடைபெறும் நிகழ்ச்சியில், 234 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்து, அவர்களை விஜய் அறிமுகம் செய்து வைக்க உள்ளார்.
