திருச்சியில் நேற்று (1.4.2026) நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டில் ஒருவாரம் தங்கியிருந்து, தமிழ்நாடு எப்படி தலைசிறந்த மாநிலமாக இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்தால், உத்தரபிரதேசம், மணிப்பூர் போன்று வன்முறைக் காடாக ஆகிவிடும். இவர்கள் வந்தால் தமிழ்நாட்டின் பெயரையே, ‘தட்சிண பிரதேஷ்” என்று மாற்றவும் தயங்க மாட்டார்கள்” என கூறியிருக்கிறார்.
திருச்சியில் கட்சிக்காக காலங்காலமாக உழைத்த திமுக நிர்வாகிகளை அவமானப்படுத்தும் வகையில், மத அடிப்படைவாத அமைப்பின் தலைவர் இனிகோ இருதயராஜை திருச்சி கிழக்கு தொகுதியில் நிறுத்தியிருக்கிறார் ஸ்டாலின். அவரை ஆதரித்து பேசும் போது, மணிப்பூர் கலவரம் பற்றி பேசியிருக்கிறார். ஆனால், ஸ்டாலினின் தந்தை கருணாநிதி முதலமைச்சராக இருக்கும்போது தான், கோவையில் மதக்கலவரம் வெடித்தது. தமிழ்நாட்டு வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு முதல் முறையாக, கோவையில் தொடர் குண்டு வெடிப்பு கொடூரம் நிகழ்ந்தது. இதனால் கோவை மட்டுமல்ல, கொங்கு மண்டலத்தின் வளர்ச்சி 10 ஆண்டுகள் பின்னோக்கி சென்றது. பெங்களூரு போல கோவை பெருநகரமாக மாற முடியாமல் போனதற்கும் இந்த குண்டுவெடிப்பே காரணம்.
