ஐபிஎல் தொடரில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காகவும், உள்ளூர் தொடரில் உத்திரபிரதேச அணிக்காகவும் புவனேஷ்வர் குமார் தொடர்ச்சியாக அபாரமாக பந்துவீசி வந்தார்.
ஆனால், தேர்வுக்குழு தலைவராக இருந்த அஜித் அகார்கர், சீனியர் வீரர்களை படிப்படியாக ஓரங்கட்டும் வேலையை செய்து வந்ததால், புவனேஷ்வர் குமாருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில், தற்போது இடைக்கால தேர்வுக்குழு தலைவராக பொறுபேற்றுள்ள பிரக்யான் ஓஜா, முதல் அணித் தேர்விலேயே, நியூசிலாந்து டி20 தொடருக்கு புவனேஷ்வர் குமாரை சேர்த்து, வியப்பை ஏற்படுத்தினார்.
இதன்மூலம், திறமையான சீனியர் வீரர்களுக்கு இனி, படிப்படியாக இடம் கிடைக்கும் எனக் கருதப்பட்டது. இதனால், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள், டெஸ்ட் தொடர்களில், முகமது ஷமியை சேர்ப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அப்படி சேர்க்கவில்லை. டெஸ்ட் தொடருக்கு சேர்க்கப்பட்டுள்ள பிரசித் கிருஷ்ணா, காயத்தில் இருந்து மீண்டு வர வில்லை என்றால், மட்டுமே மாற்று வீரராக ஷமிக்கு வாய்ப்பு கிடைக்கும் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில், தற்போது பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டிகொடுத்துள்ள இந்திய அணி முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், இந்திய அணிக்குள் க்ருணால் பாண்டியாவை கொண்டு வர வேண்டும் எனப் பேசியுள்ளார்.
அதில், ‘‘க்ருணால் பாண்டியா, ஒரு மிகச்சிறந்த கிரிக்கெட்டர். புத்திசாலித்தனமாக யோசித்து செயல்படும் சில கிரிக்கெட்டர்களில் க்ருணால் பாண்டியாவும் ஒருவர். அவரால், பெரிய அளவில் சுழலை உருவாக்க முடியாது. ஆனால், பேட்டர்களின் தகர்வுக்கு ஏற்ப லைன், லெந்தை மாற்றி, பேட்டர்களை திணறடிக்கும் ஆற்றல் இவரிடம் இருக்கிறது. இவரால், அதிக விக்கெட்களை எடுக்க முடியாவிட்டாலும், ரன்களை கட்டுப்படுத்தும் ஆற்றல் அதிகமாகவே இருக்கிறது’’ எனக் கூறினார்.
மேலும் பேசிய கவாஸ்கர், ‘‘பௌலராக மட்டுமல்ல, பேட்டராகவும், பீல்டராகவும் க்ருணால் பாண்டியாவால் அபாரமாக செயல்பட முடியும். உலகக் கோப்பையை வெல்ல விரும்பினால், இவரைப் போன்ற ஒரு வீரர் மீது நிச்சயம் முழு நம்பிக்கை வைத்து அணியில் சேர்க்க வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.
க்ருணால் பாண்டியா, தொடர்ச்சியாகவே அபாரமாக விளையாடி வருகிறார். தொடர்ச்சியாக, அதிக போட்டிகளில் சொதப்பியதும் கிடையாது. இவரை, 2021ஆம் ஆண்டிற்கு பிறகு, இந்திய அணியில் சேர்க்கவில்லை. கடைசியாக நடைபெற்ற ஐபிஎல் 2026 சீசனில், அபாரமாக பந்துவீசி, 16 போட்டிகளில் 14 விக்கெட்களை எடுத்தார். மேலும், பேட்டிங்கிலும் 226 ரன்களை சேர்க்க முடிந்தது. மேலும், எகனாமியும் 8.40 என்ற ஓரளவுக்கு சிறந்த நிலையில்தான் இருந்தது.
தொடர்ந்து பேசிய கவாஸ்கர், இந்திய வீரர்களிடம் பிட்னஸை மட்டும் பாருங்கள், வயதை பார்க்காதீர்கள் என பிசிசிஐயிடம் வேண்டுகோள் விடுத்தார்.
அதில், ‘‘இந்திய வீரர்களிடம் திறமை இருக்கிறதா என்று மட்டும் பாருங்கள். வயதை பார்த்து, ஒரு வீரரின் திறமையை குறைத்து மதிப்பிடுவது சரியாக இருக்காது. உள்நாட்டு கிரிக்கெட்டில் ஆடுகிறார், ஐபிஎலில் ஆடுகிறார் என்றால், அவரிடம் முழு பிட்னஸ் இருக்கிறது என்று தானே அர்த்தம். அப்படி, போட்டி முகுந்த தொடர்களில் சீனியர் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டால், அவர்களை இந்திய அணியில் சேர்க்க வேண்டும். வயதை காரணம் காட்டி புறக்கணிப்பது நல்ல முடிவாக இருக்காது’’ என்றார்.
தற்போது, புவனேஷ்வர் குமாரை சேர்த்திருப்பது போல, இனி வரும் தொடர்களில் சீனியர் வீரர்களை படிப்படியாக அணிக்குள் கொண்டுவர அதிக வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
