தேர்தல் பிரசாரம் தொடங்கும்போதெல்லாம், ஒவ்வொரு முறையும் கன்னியாகுமரியிலுள்ள திருவள்ளுவர் சிலையை வணங்கிவிட்டுதான் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இம்முறை, அறுபடை வீட்டிலிருந்துதான் பிரசாரத்தைத் தொடங்க வேண்டும் என கறாராகச் சொல்லிவிட்டாராம் சீமான்.
அதன்படி, கடந்த மார்ச் 23-ம் காலை கோட்டூர்புரம் விநாயகர் கோவிலில் வழிபாடு செய்திருக்கிறார். அதன்பிறகு, திருத்தணி முருகன் கோவிலில் செருப்பின்றி படியேறி பிரார்த்தனையும் மேற்கொண்டார். மாலை பிரசாரத்தின்போதும் வேட்பாளரை வேலுடன் நிற்க வைத்து முருகர் பாடலை பாடி மகிழ்ந்தார். ‘கட்சியின் கொள்கைப்படி விநாயகர் வழிபாடு முரணானது.

அதுமட்டுமில்லாமல் பிரசாரத்தைத் தொடங்கும் தினத்தன்று உருகி உருகி வழிபாடு செய்ய வேண்டியது ஏன்…’ என்று கட்சிக்குள் பலரும் முணுமுணுக்கிறார்கள். இவை எல்லாவற்றுக்கும் பின்னணியில் ‘ஜோதிடர்’ ஒருவர் இருக்கிறாராம். அவர் பேச்சைக் கேட்டுதான் சீமான் இப்படியெல்லாம் செய்து கொண்டிருக்கிறாராம். ‘இன்னும் ஜோதிடர் பேச்சைக் கேட்டு என்னவெல்லாம் செய்யப் போகிறாரோ…’ எனக் கையைப் பிசைகிறார்கள் தம்பிகள்.
த.வெ.க-வின் தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலாளர் பதவியைக் குறிவைத்து, அக்கட்சியைச் சேர்ந்த அஜிதா ஆக்னல் கட்சியில் பல்வேறு முன்னெடுப்புகளைச் செய்துவந்தார். ஆனால், கட்சியில் தனக்குப் பொறுப்பு வழங்காததால், பனையூரில் த.வெ.க தலைவர் விஜய்யின் காரை மறித்ததுடன், மனமுடைந்து தூக்க மாத்திரைகளை உட்கொண்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

அந்த பரபரப்புக்கு இடையே, எஸ்.டி.ஆர்.சாமுவேல் ராஜூவுக்கு மத்திய மாவட்டச் செயலாளர் பதவி வழங்கி, அஜிதாவுக்கு ‘ஷாக்’ கொடுத்தது த.வெ.க தலைமை. ‘கட்சிப்பதவிதான் கைவிட்டுப் போய்விட்டது. தூத்துக்குடி தொகுதியையாவது பெற்றுவிடலாம்…’ என்று அஜிதாவும், ‘சீட்டை பெற்றே ஆக வேண்டும்’ என்று சாமுவேல் ராஜூம் ஆளுக்கொரு வழியில் சீட்டுக்காக காய் நகர்த்தினர்.
ஆனால், ‘பிரச்னை எதற்கு?’ என, தன் நண்பரான நடிகர் ஸ்ரீநாத்தை தூத்துக்குடியில் களமிறக்கத் தயாராகிறாராம் த.வெ.க தலைவர் விஜய். அதனால், சீட்டை எதிர்பார்த்திருந்த இரண்டு கோஷ்டிகளுமே கடும் அப்செட்டில் இருக்கிறார்கள்.
கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரியில் மொத்தமுள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில், தலா மூன்றில் திமுக-வும் காங்கிரஸ் கட்சியும் கடந்த தேர்தலில் போட்டியிட்டன. அதில், தலைநகர் தொகுதியான நாகர்கோவிலிலும், கன்னியாகுமரியிலும் தி.மு.க தோற்றது. ஆனால், காங்கிரஸ் போட்டியிட்ட மூன்று தொகுதிகளிலும் அபார வெற்றிபெற்றது. எனவே, வரும் தேர்தலில் நாகர்கோவிலை காங்கிரஸுக்குத் தள்ளிவிட்டுவிட்டு, வெற்றிவாய்ப்புள்ள குளச்சல் தொகுதியை எடுத்துக் கொள்ள முனைப்புக் காட்டுகிறதாம் திமுக. தகவல் தெரிந்து குமுறும் கதர்கள், ‘கஷ்டப்பட்டு வேலைபார்த்து வச்சிருக்க தொகுதியை திமுகவுக்கு கொடுத்துட்டு நாங்க எங்கே போறது…’ என்று போர்க்கொடி தூக்கியிருக்கிறார்களாம்.
தவெக பொதுச்செயலாளர்களின் ஒருவரான ஆதவ் அர்ஜுனா, வில்லிவாக்கத்தில் களமிறங்கவுள்ளார். அதற்கான தேர்தல் பணிகளையும் தொகுதியில் தொடங்கிவிட்டார். த.வெ.க தலைவர் விஜய் போட்டியிடவுள்ள பெரம்பூர் தொகுதிக்கு அருகிலேயே வில்லிவாக்கம் அமைந்திருப்பதால், விஜய்யின் தாக்கம் தனது தொகுதியிலும் பிரதிபலிக்கும் என்பது ஆதவ்வின் கணக்கு. இந்தச்சூழலில், ஆதவ்வை தோற்கடிப்பதற்கான திட்டத்தில் தீவிரமாக இறங்கியிருக்கும் அமைச்சர் சேகர்பாபு, தனது சென்னை கிழக்கு மாவட்டத்தின் சார்பில், வில்லிவாக்கத்தில்தான் முதல் தேர்தல் பணிமனையை திறந்திருக்கிறாராம்.

ஆதவ்வுக்கு எதிராக முன்னாள் எம்.எல்.ஏ ரங்கநாதனை களமிறக்குவது குறித்தும் திமுக-வில் ஆலோசிக்கப்படுகிறது. அந்தப் போட்டியை சரிக்கட்ட, விஜய்யை தனது தொகுதிக்குள் இரண்டு நாள்களாவது பிரசாரத்துக்கு அழைத்துவரும் திட்டத்தில் இருக்கிறார் ஆதவ். ஆனால், ‘வில்லிவாக்கத்தில் குறுகலான சாலைகளும் சந்துகளும்தான் நிரம்பியிருக்கின்றன. அதற்குள் விஜய்யை அழைத்துவந்தால் கூட்ட நெரிசல் ஏற்படும்’ என்று தடுக்கிறாராம் புஸ்ஸி ஆனந்த். இதனால், ‘பிரசாரத்துக்கு விஜய் வருவாரா… மாட்டாரா…’ என்று குழம்பிப் போய் தவிக்கிறாராம் ஆதவ்.
தி.மு.க கூட்டணியில், ம.தி.மு.க-வுக்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதில், மூன்று தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது அக்கட்சி. ஒரு தொகுதியில் மட்டும் தீப்பெட்டி சின்னத்தில் களமிறங்கவுள்ளது. இதில், கட்சியின் தலைமை நிலையச் செயலாளரும் எம்.பி-யுமான துரை வைகோவுக்கு துளியும் விருப்பமில்லையாம். கட்சி சீனியர்களிடம் பேசும்போது, ‘ம.நீ.ம தைரியமான ஒரு முடிவை எடுத்துட்டாங்க.

அதுபோல, நம்மால எடுக்க முடியாது. நானும் எவ்வளவோ பேசிப்பார்த்தும் அறிவாலயம் இறங்கி வரலை. நமக்கு வேற வழியென்ன இருக்கு…’ என்று வருத்தப்பட்டிருக்கிறார். அவருடைய வருத்தத்தைத்தான், கட்சியின் அவைத்தலைவரான அர்ஜுன ராஜ், ‘தனிச்சின்னத்தில் போட்டியிடவே விரும்பினோம். அது முடியவில்லை என்பதால், நாங்கள் சிரித்துக்கொண்டே அழுகிறோம்’ என்று அறிவாலய வாசலில் வைத்தே பேட்டியில் உடைத்துவிட்டாராம்.
