முதல்வர் மனைவி மீது குற்றச்சாட்டு பவன் கெராவுக்கு முன்ஜாமின்

ஹைதராபாத்: காங்., மூத்த தலைவரும், அக்கட்சியின் செய்தி தொடர்பாளருமான பவன் கெரா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவின் மனைவி ரிங்கி புயான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், எகிப்து, ஆண்டிகுவா ஆகிய நாடுகளின் பாஸ்போர்ட்டுகளை வைத்துள்ளதாகவும், துபாய் உட்பட பல்வேறு இடங்களில் அவருக்கு சொத்துக்கள் இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

இது குறித்து, ரிங்கி புயான் அளித்த புகாரின்படி வழக்கு பதிந்த அசாம் போலீசார், சில நாட்களுக்கு முன், டில்லியில் உள்ள பவன் கெரா வீட்டில் சோதனை நடத்தி சில ஆவணங்களை கைப்பற்றினர். இந்த வழக்கில் முன்ஜாமின் கோரி, தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் காங்., மூத்த தலைவர் பவன் கெரா மனு தாக்கல் செய்தார். தன் மனைவி ஹைதராபாதைச் சேர்ந்தவர் என்றும், அங்குள்ள வீட்டில் தான் வசித்து வருவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி சுஜானா கலாசிகம், பவன் கெராவுக்கு ஒரு வாரத்துக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். அதற்குள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யும்படி அவருக்கு அறிவுறுத்தினார்.

Source link