முதல்வர் விஜய் குறித்து சர்ச்சைப் பேச்சு: திமுகவை பற்றி விசிக தலைவர் திருமாவளவன் சொன்ன வார்த்தை – thirumavalavan comments on abusive remarks against cm vijay dmk councillor sudha deenadayalan controversial speech

நாகரிக வரம்புகளை மீறி பேசுகிற போக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. இத்தகைய போக்கு நாகரிக அரசியலுக்கு ஆரோக்கியமானது அல்ல என விசிக தலைவர் திருமாவளவன் முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேச்சுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

சென்னையில் கடந்த 7-ஆம் தேதி சென்னை ராஜா அண்ணாமலை மன்றத்தில் திமுக சென்னை கிழக்கு மாவட்டம் மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் முப்பெரும் விழாவும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.அந்த நிகழ்ச்சியில், திமுக எம்பி கனிமொழி, சென்னை மேயர் பிரியா, திமுக முன்னாள் அமைச்சர் சேகர் பாபு உள்ளிட்ட பல முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் கலந்துகொண்டு மேடையில் பேசிய வில்லிவாக்கம் தொகுதியின் 95-வது வார்டு திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன்,முதலமைச்சர் விஜயை விமர்சிக்கும் வகையில் அவதூறான மற்றும் அருவருக்கத்தக்க வார்த்தைகளால் விமர்சித்துப் பேசியிருந்தார். இதனைத் தொடர்ந்து பேசிய திமுக எம்பி கனிமொழி,இதுபோன்ற வார்த்தைகளை மேடையில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று கடிந்துக்கொண்டார்.

திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் சர்ச்சை பேச்சு

திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் பேச்சு தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் வைரலாகி பரவியதுடன், அரசியல் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நேரடியாக எக்மோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக, ஆபாசமாகப் பேசுவது, பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பது மற்றும் மற்றவர்களிடம் கட்சித் பிரிவினையைத் தூண்டுவது உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, இந்த வழக்கின் அடிப்படையில் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு சுதா தீனதயாளனுக்கு எக்மோர் காவல்துறையினர் முறைப்படி சம்மன் வழங்கியுள்ளனர்.

அநாகரிக பேச்சு திருமாவளவன் கண்டனம்

திமுகவில் நாளுக்கு நாள் தனிமனித தாக்குதல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் முதல்வர் விஜயை தகாத வார்த்தையில் பேசி சம்பவம் குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளன் பொதுமேடையில் நாகரிக வரம்புகளை மீறிப் பேசியது குறித்துச் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்துப் பேசிய அவர், அரசியல் விமர்சனங்கள் எழுவது இயல்பான ஒன்றுதான் என்றும், ஆனால் நாகரிக வரம்புகளை மீறாமல் விமர்சனங்களை முன்வைப்பதே உண்மையான அரசியல் நாகரிகம் என்று கூறினார்.

அதிகரிக்கும் அநாகரிகப் பேச்சு போக்கு கவலையளிக்கிறது

மேலும் அண்மைக்காலமாகப் பொதுமேடைகளில் இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நிர்வாகிகள் நாகரிக வரம்புகளை மீறிப் பேசும் கலாச்சாரம் அதிகரித்து வருவது கவலையளிப்பதாகத் தெரிவித்த திருமாவளவன், இத்தகையப் போக்குகள் நமது அரசியல் சூழலுக்கு ஆரோக்கியமானது அல்ல என்றும் குறிப்பிட்டார். மேலும், திமுகவில் தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவது குறித்து அக்கட்சியின் தலைவர்களிடம்தான் கேட்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

Source link