தமிழகத்தில் கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசியல் களம் பல்வேறு மாற்றங்களை, திருப்பங்களையும் பார்த்து வருகிறது. இந்த சூழலில் தவெக அரசு மீது எதிர்க்கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தொடர் விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.
திராவிட கட்சிகளை கையாளும் அமைச்சர்கள்
இந்த சூழலில் தமிழகத்தின் பாரம்பரிய இரண்டு திராவிட கட்சிகளான திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை தவெக அமைச்சர்களான ஆதவ் அர்ஜூனா மற்றும் C. T. நிர்மல் குமார் ஆகியோர் தொடர்ந்து செய்தியாளர் பேட்டிகள் மூலமும், மக்கள் பிரச்சாரங்கள் மூலமும், சமூக வலைதளங்கள் மூலம் கையாண்டு வருகின்றனர்.
தமிழக வெற்றிக் கழகத்தின் மற்ற அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் திமுகவினர் மீதும், கடந்த திமுக ஆட்சியின் மீதும் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்ற போதும், இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகள் மற்றும் விமர்சனங்கள் பரவலாகப் பேசப்படுவதும், அரசியல் வட்டாரத்தில் சர்ச்சைகளையும் ஏற்படுத்துவதுமாக அமைகிறது.
அதிமுக: ஆதவ் அர்ஜூனா – நிர்மல் குமார்
கடந்த மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலின்போது தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர்களான மரகதம் குமரவேல் மற்றும் சத்தியபாமாவை ஆதரித்து தவெக அமைச்சர்கள் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பிரச்சாரம் மேற்கொண்டனர். அதுபோல இரண்டு தொகுதிகளிலும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் ரோட்ஷோ மற்றும் மக்கள் சந்திப்புகளை நடத்தி வாக்கு சேகரித்தார்.
அப்போது அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தவெகதான் உண்மையான அதிமுக எனவும், விசில் சின்னம்தான் முன்னாள் முதல்வர்களான செல்வி ஜெயலலிதா மற்றும் எம்ஜிஆர் ஆகியோர் விரும்பிய அதிமுக சின்னமாக இருப்பதாகக் கூறினார். இதற்கு அவர் மீது அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டது.
இடைத்தேர்தலுக்குப் பிறகு அதிமுக தோல்வியை முன்வைத்து அமைச்சர் நிர்மல் குமார் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மீதும், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதும் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கடந்த 10 ஆண்டுகளில் இத்தனை தோல்விகளைச் சந்தித்ததற்கு எடப்பாடி பழனிசாமி என்ற ஒருவர்தான் காரணம் எனவும் கடுமையாகச் சாடினார்.
திமுக: ஆதவ் அர்ஜூனா – நிர்மல் குமார்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகி தவெகவில் இணைந்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். திமுக ஒரு மன்னராட்சி மனப்பான்மை கொண்ட கட்சி எனவும், அதில் எப்போதும் குடும்ப ஆட்சியும் மன்னராட்சியும் மட்டுமே நடக்கும் எனக் கடுமையாக விமர்சித்தார்.
மேலும் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, திமுகவைக் கடுமையாகக் குற்றம்சாட்டும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா உதயநிதி மீது விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். அதுபோல அமைச்சர் நிர்மல் குமார், மிசா விவகாரம், சர்க்காரியா கமிஷன், திமுக ஆட்சியின் ஊழல்கள் என திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்து விமர்சித்து வருகிறார்.
இரண்டு பெரிய திராவிட கட்சிகளை முதல்முறை ஆட்சி அமைத்த அரசின் இரண்டு அமைச்சர்கள் தனியாகக் கையாண்டு வருகின்றனர். இந்த இரண்டு திராவிட கட்சிகளின் அறிக்கைகள், புகார்கள், குற்றச்சாட்டுகள் என அவர்களிடத்தில் இருந்து எழுந்தாலும் அதில், பாதிக்கு மேற்பட்டவை அமைச்சர்கள் ஆதவ் அர்ஜூனா மற்றும் நிர்மல் குமார் ஆகியோரை குறிப்பிட்டே அமைந்திருக்கும் படி உள்ளது.
முதல்வர் விஜய்யின் பிளானா?
இந்த திராவிட கட்சிகள் வைக்கும் குற்றச்சாட்டுகளை அடுத்த நாள் இல்லாமல் போகும்படி அமைக்கிறது அமைச்சர்களின் பேட்டிகளும், குற்றச்சாட்டுகளும். இது மக்கள் மத்தியில் தவெக அரசின் விமர்சனங்களை எதிர்க்கட்சிகள் கொண்டு செல்ல முடியாமல் தடுப்பதற்கும், தவெக அமைக்கும் கோட்டிலேயே இரண்டு திராவிட கட்சிகளை முதல்வர் விஜய் பயணம் செய்ய முதல்வர் விஜய் கையாளும் தந்திரம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
Source link
