முதல் பாகமான 'துரந்தர்' பாகிஸ்தானின் பயங்கரவாத நிழல் உலக விஷயங்களை மேலோட்டமாக பேசியது; அதே இரண்டாம் பாகமான

முதல் பாகமான ‘துரந்தர்’ பாகிஸ்தானின் பயங்கரவாத நிழல் உலக விஷயங்களை மேலோட்டமாக பேசியது; அதே இரண்டாம் பாகமான ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ பல விஷயங்களை நிகழ்கால சம்பவங்களுடன் ஒன்றிணைத்து நேரிடையாக பலவற்றை சிந்திக்க வைக்கிறது.

சுமார் 4 மணி நேரம் ஓடும் படத்துக்கு ஒரு சுவாரஸ்யமான திரைக்கதை எழுதி வெற்றி பெற்றுள்ளார் இயக்குனர் ஆதித்யா தார்; திரைக்கதை அளவில், நிச்சயம் இந்திய அளவில் தவிர்க்க முடியாத சினிமா படைப்பு இது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

படத்தின் கதை:

முதல் பாகத்தின் க்ளைமாக்ஸில் இருந்து இப்படம் தொடங்குகிறது. இந்திய உளவாளியான ஜஸ்கிரத் சிங் ரங்கி (ரன்வீர் சிங்), ரஹ்மான் டிகைத் மறைவுக்குப் பின் பாகிஸ்தான் கராச்சி நகரில் ஹம்சா அலி மசாரி என்ற பெயரில் நிழல் உலக தாதாவாக உருவெடுக்கிறார்.

பின் மெல்ல மெல்ல பாகிஸ்தானின் அரசியல், நிழல் உலகம் மற்றும் அதிகார மையங்களுக்குள் ஊடுருவுகிறார்.

இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜய் சன்யாலின் (மாதவன்) வழிகாட்டுதலில், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அதிகாரி மேஜர் இக்பால் (அர்ஜுன் ராம்பால்) மற்றும் போலீஸ் அதிகாரி சவுத்ரி அஸ்லம் (சஞ்சய் தத்) ஆகியோருடன் இணைந்து கொண்டே பாகிஸ்தானின் பயங்கரவாத உலகை ஆட்டம் காணச்செய்வது தான் ‘துரந்தர் 2’ படத்தின் கதை.

படம் முழுவதும் வரும் உண்மை சம்பவங்களின் குறிப்புகளும், அவற்றை காட்சிகளில் சேர்த்த விதமும் ‘சபாஷ்’ போட வைக்கிறது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, உ.பி., எம்.எல்.ஏ., மற்றும் சகோதரர் கொலை, தாவூத் இப்ராஹிமின் நிழல் உலக செயல்பாடு, ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ என பல சம்பவங்களை ஒன்றுடன் ஒன்று முடிச்சு போட்டிருப்பது படத்தை சுவாரஸ்யமாக்குகிறது. படத்தின் இடைவேளை மற்றும் க்ளைமாக்ஸ் காட்சிகளின் ‘ட்விஸ்ட்’ பார்வையாளர்களின் கைத்தட்டலை அள்ளுகிறது.

மாதவன் முதல் பாகத்தை போலவே இதிலும் சிறப்பாக நடித்துள்ளார். அவருக்கு என்று ஒரு சில ‘மாஸ்’ காட்சிகளும் உள்ளன. ‘துரந்தர் 2’ தேசப்பற்றையும், ஆக்ஷனையும் சரியான விகிதத்தில் கலந்து பார்வையாளர்களுக்கு தந்திருக்கும் ஒரு ‘ஸ்பை த்ரில்லர்’ படமாகும்.

சினிமா என்பதை கடந்து ஒரு நிஜ அரசியல் உலகின் நிழல் யுத்தத்திற்குள் நுழைந்ததை பார்க்க முடிந்தது.

என்ன உணர்வை தருகிறது?

தன் தாய் நாட்டிற்காக ஒருவன் அனைத்தையும் துறந்து தேசப்பற்று மற்றும் தியாகத்தின் சின்னமாக கருதப்படுகிறான். இந்த படத்தை பார்க்கும் போது ஏதோ ஒரு வகையில் நாமும் நாம் பிறந்த இந்த நாட்டுக்காக என்ன பங்களிப்பை செய்துள்ளோம் என்ற கேள்வியை நம்முள் எழுப்புகிறது.

நாட்டைப் பாதுகாப்பதும், நாட்டின் பாதுகாப்பை நிலைநிறுத்துவதும் நம் அனைவரின் முதன்மையான பொறுப்பு என்பதை உணர வைத்துள்ளது.

தியாகம் செய்வதை விட பெரிய செயல் எதுவும் இல்லை; அதுவும் நாட்டுக்காக தியாகம் பண்ணுவதை விட பெரிய தர்மம் எதுவும் இல்லை என்பதே துரந்தர் சொல்லும் பாடம்.

துரந்தர் இந்திய கருத்தியல் தளத்தில் நடத்தப்பட்ட மிக முக்கியமான துல்லிய தாக்குதல். பத்தாயிரம் மேடை போட்டு பக்கம் பக்கமாக விளக்கி சொன்னாலும் புரிய வைக்க முடியாதவற்றை இப்படம் நிகழ்த்தி காட்டியுள்ளது என்றால் அது மிகையல்ல.

அனைவரும் குடும்பத்துடன், குறிப்பாக, பள்ளி, கல்லுாரியில் படிக்கும் மகன், மகள்களுடன் பார்க்க வேண்டிய படம். மிஸ் பண்ணிடாதீங்க, மக்களே!

Source link