பெங்களூரு: சென்னை அணி, ‘நடப்பு சாம்பியன்’ பெங்களூருவை எதிர்கொள்கிறது. தொடர்ந்து இரு போட்டிகளில் தோற்ற சென்னை, இம்முறை வெற்றிப்பாதைக்கு திரும்ப வேண்டும்.
ராஜஸ்தானுக்கு எதிரான முதல் போட்டியில் பேட்டர்கள் தடுமாற, சென்னை அணி 127 ரன்னுக்கு சுருண்டு தோல்வி அடைந்தது. பஞ்சாப் அணிக்கு எதிராக 209/5 ரன் குவித்த போதும், பவுலர்கள் ஏமாற்ற தோல்வியை தழுவியது. சின்னசாமி மைதானத்தில் ஏப். 5ல் நடக்கும் போட்டியில் வலிமையான பெங்களூருவை சந்திக்கிறது.
சுதாரிப்பாரா சாம்சன்: துவக்கத்தில் சஞ்சு சாம்சன் (6, 7 ரன்) சொதப்புகிறார். ‘டி-20’ உலக கோப்பை தொடரில் அசத்திய இவர், மீண்டும் விளாச வேண்டும். கேப்டன் ருதுராஜ் ‘பார்ம்’ இல்லாமல் தவிக்கிறார். கடந்த போட்டியில் ஆயுஷ் மாத்ரே (73), ஷிவம் துபே (45), சர்பராஸ் கான் (32) நம்பிக்கை தந்தனர். ‘காஸ்ட்லி’ கார்த்திக் சர்மா, பிரசாந்த் வீர் ஏமாற்றுகின்றனர். கடைசி கட்டத்தில் கைகொடுக்க தோனி இல்லாதது பலவீனம்.
தடுமாறும் ‘பவுலிங்’: சென்னை பவுலர்கள் சொதப்பியதால், ராஜஸ்தான் (12.1 ஓவர்), பஞ்சாப் (18.4 ஓவர்) விரைவாக வென்றன. இவ்விரு போட்டிகளில், 30.5 ஓவரில் 328 ரன்னை வாரி வழங்கினர். 7 விக்கெட் தான் சாய்த்தனர். பஞ்சாப் அணிக்கு எதிராக ‘ஸ்பின்னர்’கள் நுார் அகமது, ராகுல் சகார் சேர்ந்து 8 ஓவரில் 84 ரன் விட்டுக் கொடுத்தனர். மாட் ஹென்றி, கலீல் அகமது, கம்போஜ் உள்ளிட்ட ‘வேகங்களும்’ சோபிக்கவில்லை. பவுலிங் படை எழுச்சி கண்டால், சென்னை அணி வெற்றியை ருசிக்கலாம்.
கோலி பலம்: பெங்களூரு அணியின் பேட்டிங் வலுவாக உள்ளது. ஐதராபாத்திற்கு எதிராக அனுபவ கோலி, தேவ்தத் படிக்கல் அரைசதம் கடந்து வெற்றி தேடித் தந்தனர். பில் சால்ட், கேப்டன் ரஜத் படிதார், ‘பினிஷர்’ ஜிதேஷ் சர்மா, டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்டு ரன் குவிக்கலாம். பந்துவீச்சில் ஹேசல்வுட் இல்லாத போதும், ஜேக்கப் டபி, புவனேஷ்வர் குமார் அசத்துகின்றனர். ‘சுழலில்’ மிரட்ட, சுயாஷ் சர்மா, குர்ணால் பாண்ட்யா உள்ளனர்.
மழை வருமா
இரு அணிகளும் 35 முறை மோதின. சென்னை 21, பெங்களூரு 13ல் வென்றன. ஒரு போட்டிக்கு முடிவு இல்லை.
* சின்னசாமி மைதான ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமானது.
* பெங்களூருவில் ஏப். 5ல் மழைக்கு வாய்ப்பு இல்லை.
