மும்பை அணியை வென்றது டில்லி: சமீர் ரிஸ்வி அரைசதம் விளாசல்

டில்லி: சமீர் ரிஸ்வி 90 ரன் விளாச, டில்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.

ஆண்டு தோறும் கிரிக்கெட் லீக் தொடர் நடக்கிறது. நேற்று, டில்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடந்த போட்டியில் டில்லி, மும்பை அணிகள் மோதின. உடல் நிலை சரியில்லாததால், மும்பை அணியின் ‘ரெகுலர்’ கேப்டன் ஹர்திக் பாண்ட்யா விளையாடவில்லை. அணியை சூர்யகுமார் வழிநடத்தினார். ‘டாஸ்’ வென்ற டில்லி அணி கேப்டன் அக்சர் படேல், ‘பீல்டிங்’ தேர்வு செய்தார்.

சூர்யகுமார் அரைசதம்: மும்பை அணிக்கு முகேஷ் குமார் தொல்லை தந்தார். இவரது ‘வேகத்தில்’ ரியான் ரிக்கிள்டன் (9), திலக் வர்மா (0) வெளியேறினர். ரோகித் சர்மா (35) நம்பிக்கை தந்தார். அபாரமாக ஆடிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் (51 ரன், 36 பந்து, 2X6, 3X4) அரைசதம் கடந்தார். நமன் திர் (28) ஓரளவு கைகொடுத்தார்.

மும்பை அணி 20 ஓவரில், 162/6 ரன் எடுத்தது. சான்ட்னர் (18), கார்பின் பாஷ் (11) அவுட்டாகாமல் இருந்தனர். டில்லி அணி சார்பில் முகேஷ் குமார் 2 விக்கெட் கைப்பற்றினார்.

ரிஸ்வி அபாரம்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு லோகேஷ் ராகுல் (1), நிதிஷ் ராணா (0) ஏமாற்றினர். அடுத்து வந்த பதும் நிசங்கா, 30 பந்தில் 44 ரன் விளாசினார். கார்பின் பாஷ் வீசிய 11வது ஓவரில் 2 சிக்சர், 2 பவுண்டரி அடித்த சமீர் ரிஸ்வி, மயங்க் மார்கண்டே பந்தை சிக்சருக்கு அனுப்பி அரைசதம் கடந்தார். பும்ரா வீசிய 16வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார் டேவிட் மில்லர். நான்காவது விக்கெட்டுக்கு 78 ரன் சேர்த்த போது பாஷ் பந்தில் ரிஸ்வி (90 ரன், 7X6, 7X4) அவுட்டானார். பாஷ் பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய மில்லர் வெற்றியை உறுதி செய்தார்.

டில்லி அணி 18.1 ஓவரில் 164/4 ரன் எடுத்து 2வது வெற்றியை பதிவு செய்தது. மில்லர் (21), ஸ்டப்ஸ் (3) அவுட்டாகாமல் இருந்தனர். ஆட்ட நாயகன் விருதை சமீர் ரிஸ்வி வென்றார்.

Source link