மும்பை: திரைப்பட இயக்குனரும் 1990-களில் பிரபலமான குழந்தை நட்சத்திரமான பேபி குட்டுவின் தந்தையுமான எம். எம். பெக் 70, மும்பை அந்தேரி மேற்கில் உள்ள அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.
எம். எம். பெக், வயோதிகம் காரணமாக, கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு தனியாக வசித்து வந்தார்.இந்த நிலையில் நேற்று இரவு, அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அண்டை வீட்டார் புகார் அளித்ததை அடுத்து மும்பை காவல்துறை கதவை உடைத்து உள்ளே சென்றபோது அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.
அவர் இறந்து சுமார் 4 முதல் 5 நாட்கள் ஆகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
மறைந்த எம். எம். பெக், 1994-ல் ஷில்பா ஷிரோட்கர் நடித்த சோட்டி பாஹு திரைப்படத்தை இயக்கினார். மேலும், ஜே. ஓம் பிரகாஷ் மற்றும் ராகேஷ் ரோஷன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார்.
ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் அறிமுகமாவதற்கு முன்பே, அவருக்கு வசனம் உச்சரிப்பு, நடிப்புப் பயிற்சியில் எம். எம். பெக் உதவியாக இருந்தார்.
இவரது மகள் ஷஹிந்தா பெக் (பேபி குட்டு) தற்போது குவைத் ஏர்வேஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். தந்தையின் மறைவுச் செய்தி கேட்டு அவர் மும்பை விரைந்துள்ளார்.இவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக கூப்பர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
