மும்பை: பாகிஸ்தானில் பதுங்கி வாழும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் குடும்பத்திற்கு சொந்தமான 4 சொத்துகள்

மும்பை: பாகிஸ்தானில் பதுங்கி வாழும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் குடும்பத்திற்கு சொந்தமான 4 சொத்துகள் 5வது முறையாக நடந்த ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது.

கடந்த 1993ம் ஆண்டு மும்பையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 257 பேர் உயிரிழந்தனர். 700 பேர் காயமடைந்தனர். இதற்கு காரணமான தாதா தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கி வாழ்ந்து வருகிறான். அவனை ஒப்படைக்க வேண்டும் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால், அவன் தங்கள் நாட்டில் இல்லை என பாகிஸ்தான் பொய் சொல்லி வருகிறது.

தாக்குதல் சம்பவங்களை தொடர்ந்து அவனது மற்றும் குடும்ப சொத்துகள் அனைத்தையும் மத்திய அரசு பறிமுதல் செய்தது. பல சொத்துகள் ஏலம் விடப்பட்ட நிலையில், தாவூத் இப்ராஹிமின் பூர்விக சொத்தாக மஹாராஷ்டிரா மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் உள்ள மும்பகே கிராமத்தில் நான்கு விவசாய நிலங்கள் மட்டும் ஏலம்போகவில்லை. இந்த நிலங்கள் தாவூத் இப்ராஹிமின் தாயார் அமீனா பீவி பெயரில் இருந்தன.

கடந்த 2017, 2020, 2024 மற்றும் 2025 ம் ஆண்டுகளில் ஏலம் விட மத்திய அரசு முயற்சி செய்தது. கடந்த நவம்பர் மாதம் சொத்துகளின் மதிப்பை 30 சதவீதம் குறைக்கப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களினால் இந்த நிலங்கள் விற்பனை ஆகாமல் இருந்தது.

இந்நிலையில், இந்த நிலங்கள் இன்று மீண்டும் ஏலத்தில் விட்டது. கடத்தல்காரர்கள் மற்றும் அந்நியச் செலாவணி மோசமடி செய்பவர்கள்( சொத்து பறிமுதல்) சட்டப்படி(SAFEMA) ஏலம் நடந்தது. அதில் 9.41 லட்ச ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்ட நிலம் முதலில் ஏலத்திற்கு வந்தது. மும்பை மற்றும் ரத்னகிரியை சேர்ந்த இருவர் பங்கேற்றனர். மும்பையை சேர்ந்தவர் 10 லட்ச ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.

எஞ்சிய 3 விவசாய நிலங்களும் 2.33 லட்ச ரூபாய், 8.08 லட்ச ரூபாய் மற்றும் 15,440 ரூபாய்க்கு ஏலம் போனது. இதனை ஏலத்தில் எடுத்தவர்களும் மும்பையை சேர்ந்தவர்கள். இந்த நிலங்களை ஏலத்தில் எடுத்தவர்கள் வரும் ஏப்ரல் மாதத்துக்குள் பணத்தை செலுத்திய பிறகு, நிலம் அவர்களுக்கு சொந்தமாகும். இதன் மூலம் தாவூத் இப்ராஹிமுக்கு சொந்தமான அனைத்து நிலங்களும் ஏலத்தில் விடப்பட்டன.

Source link