மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஒரு வாரத்தில் 44 கோடி ரூபாய் மதிப்புள்ள உயர்தர

மும்பை: மஹாராஷ்டிராவின் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் கடந்த ஒரு வாரத்தில் 44 கோடி ரூபாய் மதிப்புள்ள உயர்தர கஞ்சா மற்றும் வைரங்கள், தங்க நகைகள் என 46 கோடி ரூபாய் மதிப்புள்ள பொருட்களை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்தின் தலைநகர் பாங்காக்கில் இருந்து மும்பை சர்வதேச விமான நிலையத்திற்கு கடந்த வாரத்தில் வந்த ஒன்பது பயணியரிடம் சுங்கத்துறை யினர் அதிரடி சோதனை நடத்தினர்.

வெவ்வேறு நாட்களில் நடந்த சோதனைகளில் 44.292 கிலோ ஹைட்ரோபோனிக் எனப்படும் உயர்தர கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு 44.292 கோடி ரூபாய். கடத்தலில் ஈடுபட்ட ஒன்பது பேரையும் போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

இது தவிர 299 கிராம் மெத்தாகுவலோன் என்ற போதை பொருளும் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சந்தை மதிப்பு 74.75 லட்சம் ரூபாய். இது தவிர ஐந்து தனித்தனி சம்பவங்களில் 32.85 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் 94.97 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரங்கள் 21.51 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம் உட்பட மொத்தம் 46 கோடி ரூபாய் கடத்தல் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, மும்பை விமான நிலையத்தில் சோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.

Source link