மும்பை: மஹாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜித் பவார், விமான விபத்தில் உயிரிழந்ததால் பாராமதி சட்டசபை

மும்பை: மஹாராஷ்டிர துணை முதல்வராக இருந்த அஜித் பவார், விமான விபத்தில் உயிரிழந்ததால் பாராமதி சட்டசபை தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இவரது மனைவியும், தேசியவாத காங்., தலைவருமான சுநேத்ரா பவார் இங்கு போட்டியிடுகிறார். இவர், ஏற்கனவே துணை முதல்வராக பதவியேற்றார். இவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என, பா.ஜ., கூட்டணி தலைவர்கள் விரும்பினர்.

‘இவரை எதிர்த்து யாரும் போட்டியிட வேண்டாம். ஒரு தலைவர் மறைந்து விட்டால், அவரது தொகுதியில் அவரது குடும்பத்தினர் போட்டியிட்டால், யாரும் எதிர்க்கக்கூடாது என்பது சம்பிரதாயம்’ என, எதிர்க்கட்சிகளிடம் கேட்டுக் கொண்டார் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ்.

இதையடுத்து, தேர்தலில் போட்டியில்லை என, உத்தவ் தாக்கரே அறிவித்தார். ஆனால், வேட்பாளரை காங்., அறிவித்து விட்டது. இது தொடர்பாக, அக்கட்சியின் நிர்வாகிகளிடம் பலர் பேசினர். எனினும் காங்., மசியவில்லை.

இதையடுத்து, மஹாராஷ்டிராவின் அரசியல் குரு என்றழைக்கப்படும், சரத் பவார் களத்தில் இறங்கினார். இவரது சகோதரரின் மகன் தான் மறைந்த அஜித் பவார்.

இவர் ராகுலை தொலைபேசியில் அழைத்து, ‘சுநேத்ரா பவாரை எதிர்த்து போட்டியிடுவது உங்கள் விருப்பம். ஆனால், என் அறிவுரை, போட்டியிடாமல் இருந்தால் நல்லது. அஜித்தின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுமென்றால், சுநேத்ராவை எதிர்த்து யாரும் போட்டியிடக்கூடாது என்பது என் விருப்பம்’ என, உணர்ச்சிகரமாக பேசி விட்டார் சரத் பவார்.

இதையடுத்து, கடைசி நேரத்தில், தன் கட்சி வேட்பாளரை வாபஸ் பெற சொன்னாராம் ராகுல். இருந்தாலும், பாராமதி தொகுதியில் தேர்தல் நடக்கும். காரணம், 20க்கும் மேலான சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர்

Source link