மும்பை: மும்பை அருகே டேங்கர் லாரி விபத்துக்குள்ளானதில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல் 24 மணி நேரம் கடநதும் நீடிக்கிறது.
மஹாராஷ்டிராவில் மும்பை புனே தேசிய நெடுஞ்சாலையில் கண்டாலாகாட் என்ற பகுதியில் ரசாயன எரிபொருள் ஏற்றிய டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியானது எதிர்பாராத விதமாக நேற்று (ஜன.3) கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தை தொடர்ந்து, லாரியில் இருந்த எளிதில் தீப்பற்றக்கூடிய ரசாயன பொருள் (புரோப்பலீன் வாயு) கசிய தொடங்கியதால் பதற்றமும், பீதியும் உருவானது. தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் விரைந்து சென்றனர். சம்பவ பகுதியை அவர்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மீட்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளில் இறங்கினர்.
இந்த விபத்து அதோஷி சுரங்கப்பாதை அருகே நிகழ்ந்ததால் போர்காட் பகுதி வரை வாகனங்கள் அணிவகுக்க ஆரம்பித்தன. போக்குவரத்து நெருக்கடி மேலோங்கியதால் மும்பை செல்லும் பாதை முற்றிலும் மூடப்பட்டன. கிட்டத்தட்ட பல கிலோமீட்டர் தொலைவுக்கு புனே செல்லும் பாதையில் திருப்பி விடப்பட்டன.
அரசு பஸ்கள், கார்கள், வேன்கள் என 100க்கான வாகனங்களில் உள்ளவர்கள் விடிய, விடிய தவித்தனர். இலகுரக வாகனங்கள் 42 கிமீ சுற்றிச்செல்லும் வகையில் கபோலி நெடுஞ்சாலையில் திருப்பி விடப்பட்டு உள்ளன. போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்ப வெகுநேரம் பிடிக்கும் என்பதால் அதிவேக நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் பயணிப்பதை தவிர்க்க வேண்டும் என்று போக்குவரத்து போலீசார் வேண்டுகோள் விடுத்து இருக்கின்றனர்.
