மும்பை: மொபைல் போன் எண்ணுக்கு பதிலாக, பயனரின் (Usernames) பெயரை பயன்படுத்தி மெசேஜ் மற்றும் வீடியோ கால் செய்யும் வசதியை வாட்ஸ் அப் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ் அப் செயலி உலகளவில் கோடிக்கணக்கான பயனாளர்களைக் கொண்டுள்ளது. மெசேஜ், வீடியோ கால் மற்றும் பேமென்ட் என பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ள வாட்ஸ் அப், பயனர்களின் வசதிக்கு ஏற்ப, அடிக்கடி அப்டேட்டுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், தற்போது மொபைல் போன் எண்களுக்கு பதிலாக, பயன்படுத்துபவர் பெயர் அடிப்படையில் (username)மெசேஜ் மற்றும் வீடியோ கால் செய்யும் வசதியை வாட்ஸ் அப் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கிறது, தனித்துவமான பயனர் பெயர்களை பயன்படுத்தி மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளலாம். வாடிக்கையாளர்கள், வர்த்தக நிறுவனங்களும் தனித்துவமான பயனர் பெயர்களை முன்பதிவு செய்துகொள்ள முடியும்.
இது குறித்து வாட்ஸ்அப் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘புதிய நண்பர்கள், குழுக்கள் மற்றும் வணிக நிறுவனங்களுடன் மொபைல் போன் எண்களைப் பகிராமலேயே இணைவதற்கு இந்த வசதி உதவிகரமாக இருக்கும்.
இது தேவையற்ற அழைப்புகளை குறைக்கவும், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கவும் உதவும்,’ எனக் கூறினார். வரும் ஜூன் மாதத்திற்குள் இந்த புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
