முருகப் பெருமானின் அருளை பெற வேண்டும் என நினைக்கும் அடியார்களில் பெரும்பாலானவர்கள் படிப்பது கந்தசஷ்டி கவசம் தான். அதற்கு அடுத்தபடியாக அதிகமானவர்களால் படிக்கப்படும் முருகனின் பக்தி பாடலாக இருப்பது வேல் மாறல் பாடல் தான். அருணகிரிநாதர் இயற்றிய வேல் வகுப்பின் 16 பாடல்களை முன்னும் பின்னுமாகவும், மேலும் கீழுமாகவும் படிக்கட்டு முறையில் அமைத்து, 64 பாடல்களாக வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகளால் இயக்கப்பட்டது தான் இந்த வேல் மாறல்.
வேல் மாறல் :
முருகப் பெருமானின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு வேல் மாறல் பாராயணம் ஒரு மிக சிறப்பான வழியாக கருதப்படுகிறது. மனக்கவலை தீரவும், மன உறுதி பெறவும், வாழ்க்கையில் சவால்களை எதிர்கொள்ளும் நம்பிக்கை வளரவும் வேல் மாறல் பதிகங்களை பக்தியுடன் பாராயணம் செய்யலாம். வேல் மாறலை தொடர்ந்து நம்பிக்கையுடன் படித்து வந்தால் வேண்டுதல் நிறைவேறும், வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும், துன்பங்கள், நோய்கள் நீங்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.
“வேலும் மயிலும் எப்போதும் எனக்கு துணையாக, பாதுகாப்பாக இருக்கும். என்னுடைய மனம் என்னும் குகைக்குள் வசிக்கும் முருகனின் திருவடிகளை அடைய முருகுனின் கையில் இருக்கும் வேல் எனக்கு வழிகாட்டும். அசுரர்களை அழித்து, தேவர்களை காத்த வேல் என்னையும் எப்போதும் காக்கும்” என்பதே வேல் மாறல் பாடல்களின் சுருக்கமான பொருள் ஆகும்.”திருத்தணியில் உதித்தருளும்” என்ற பாடலை 108 முறை படிப்பதால் முருகன் நம்முடைய மனதில் வந்து குடியேறுவார் என்பதால் தான் வேல் மாறல் படிப்பது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது.
வேல் மாறல் படிக்கும் சரியான முறை :
1. காலையில் அல்லது மாலையில் படிக்கலாம். குளித்துவிட்டு, அமைதியான இடத்தில் முருகப் பெருமானின் படம் அல்லது சிலை அல்லது வேல் முன்பாக அமருங்கள். சிறிய தீபம் ஏற்றி, பூக்கள் சமர்ப்பிக்கலாம்.
2. கண்களை மூடி, மனதை ஒருமுகப்படுத்தி, மனதிலுள்ள கவலைகளை சுருகனிடம் ஒப்படைப்பதாக எண்ணி, “ஓம் சரவண பவ” என்று 6 அல்லது 12 முறை சொல்ல வேண்டும்.
3. வேல் மாறல் பாடல்களைத் தெளிவாகவும், அவசரப்படாமலும் படியுங்கள். முதலில் ஒரு முறை முழுமையாகப் படிப்பதிலிருந்து தொடங்கலாம். நேரமும் பழக்கமும் இருந்தால் உங்கள் வசதிக்கேற்ப தொடர்ந்து, ஒரு நாளில் எத்தனை முறை முடியுமோ அத்தனை முறை பாராயணம் செய்யலாம்.
4. வேல் மாறல் பாராயணம் முடிந்ததும், உங்கள் பிரார்த்தனையை மனதார முருகனிடம் சொல்லுங்கள்.
5. குறிப்பிட்ட எண்ணிக்கையில் படிக்க வேண்டும் அல்லது குறிப்பிட்ட நாளில் தான் படிக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. நம்பிக்கையுடன் மனதை அமைதி நிலையில் வைத்து படிப்பது மிகவும் முக்கியம்.
எத்தனை நாட்கள் படிக்க வேண்டும்?
பல முருக பக்தர்கள் தொடர்ந்து 48 நாட்கள் வேலுக்கு பூஜை செய்து வழிபட்டு, வேல் மாறல் படிப்பதை செய்கிறார்கள். இன்னும் சிலர் வேண்டுதல் நிறைவேறும் வரை காலையிலும், மாலையிலும் படிப்பது உண்டு. இதில் அவரவர்களின் வசதி மற்றும் வேண்டுதலுக்கு ஏற்ப நாட்களை முடிவு செய்து கொள்ளலாம்.
முருகனிடம் எப்படி வேண்டிக் கொள்ள வேண்டும்?
“முருகா, என் மனக்கஷ்டங்கள் அனைத்தையும் தாங்கும் மனவலிமையை எனக்கு கொடு. என் குடும்பத்தை காப்பாற்று. சரியான வழியை காட்டி, என் வாழ்க்கையில் நிம்மதியும் தைரியமும் கொடும். எப்போதும் எனக்கு துணையாக இரு. உன்னுடைய திருநாமத்தை எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும் பாக்கியத்தை கொடு” என்று முருகப் பெருமானிடம் மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.
Source link
