முருக கடவுளாக விஜயை போற்றி பாடியதால் போலீசில் புகார்

திருநெல்வேலி: தமிழக வெற்றிக் கழக மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில், முருகபெருமானை போற்றும் பிரசித்தி பெற்ற பக்திப் பாடலை அரசியல் சுயநலத்திற்காக மாற்றிப் பாடியதாக பாடகர் வேல்முருகன், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மீது, ஹிந்து முன்னணி மாநிலச் செயலர் குற்றாலநாதன் திருநெல்வேலி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

சென்னையில், தமிழக வெற்றிக் கழக மூன்றாமாண்டு துவக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில், முருகக்கடவுள் குறித்த பாடலை கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் பாடகர் வேல்முருகன் பாடினார். கடைசி வரிகளில் விஜயை உருவகப்படுத்தி பாடினார்.

முருகன் பக்திப் பாடலின் வரிகளை மாற்றி, அரசியல் கட்சியைப் புகழும் வகையில் பாடியதால், பக்தர்களின் மத உணர்வுகள் புண்படுத்தப்பட்டுள்ளதாக ஹிந்து முன்னணி மாநில செயலர் குற்றாலநாதன் குற்றஞ்சாட்டினார்.

இது தொடர்பாக பாடகர் வேல்முருகன், விஜய், த.வெ.க., பொதுச்செயலர் ஆனந்த் உள்ளிட்ட நான்கு பேர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் தெரிவித்தார்.

‘நடவடிக்கை எடுக்க தவறினால் நீதிமன்றத்தை நாடுவோம்’ எனவும், குற்றாலநாதன் தெரிவித்தார். இதே போன்று மதுரை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல இடங்களிலும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Source link