முருங்கை ஏற்றுமதி 40% சரிவு உள்நாட்டில் விற்க முயற்சி

சென்னை: தமிழகத்தில் முருங்கை ஏற்றுமதி 40 சதவீதம் சரிந்துள்ள நிலையில், தேக்கம் அடைந்துள்ள முருங்கை பொருட்களை உள்நாட்டில் விற்க முயற்சி செய்வதாக முருங்கை ஏற்றுமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மதுரையை சேர்ந்த முருங்கை ஏற்றுமதியாளர் சுஜாதா சரவணகுமரன் கூறியதாவது:

இந்தியாவில் முருங்கை உற்பத்தியில் தமிழகம் முதல் இடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட 20,000 ஹெக்டேரில் முருங்கை சாகுபடி செய்யப்படுகிறது.

தமிழகத்திலிருந்து அமெரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளுக்கு முருங்கை பொருட்களை ஏற்றுமதி செய்து வருகிறோம். மேற்காசிய போரால் பல நாடுகளுக்கும் முருங்கை பொருட்களை அனுப்புவது தடைபட்டுள்ளது.

விமான போக்குவரத்து கட்டணம் உயர்ந்துள்ளதால் பொருட்களை அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கு முன்பு 18,000 ரூபாய் விமான கட்டணம். தற்போது அது 48,000 ரூபாயாக உயர்ந்துள்ளது. அமெரிக்காவுக்கு 68,000 ரூபாயாக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவிலும் எரிபொருள் விலை உயர்ந்துள்ளதால் முருங்கை பொருட்களை அதிக விலை வைத்து விற்க முடியாத சூழல் நிலவுகிறது.

நாங்கள், 60 வகையான முருங்கை பொருட்களை தயாரித்து வருகிறோம். முருங்கை பொருட்களுக்கான ஏற்றுமதி, தேவை குறைந்ததால் பொருட்கள் தேக்கம் அடைந்துள்ளன.

தமிழகத்தில் முருங்கையின் ஏற்றுமதி 40 சதவீதம் குறைந்துள்ளது.

தற்போதைக்கு போர் நிறுத்தப்பட்டிருந்தாலும் இதன் பாதிப்பு குறைவதற்கு எப்படியும் ஓராண்டு ஆகும் என்கின்றனர்.

அதனால் உள்நாட்டு சந்தையில் விற்க முயற்சி செய்து வருகிறோம். அதேபோல் விமான சரக்கு கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்தால் உதவியாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Source link