'முறையற்ற வர்த்தக நடவடிக்கை': இந்தியா மீது அமெரிக்கா விசாரணை

புதுடில்லி: இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளின் வர்த்தக கொள்கை மற்றும் தொழில்துறை செயல்பாடுகள் குறித்து, அமெரிக்க அரசு விசாரணையை துவங்கிஉள்ளது. தேவைக்கு பல மடங்கு அதிக தயாரிப்பு வாயிலாக, முறையற்ற வர்த்தக நடைமுறையை பின்பற்றியதாக குற்றம்சாட்டியுள்ளது.

பிற நாடுகள் தங்கள் பொருட்களுக்கு விதிக்கும் அதிக வரிக்கு எதிராக, இந்தியா உள்ளிட்ட ஏராளமான நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கடந்த ஆண்டில் பரஸ்பர வரி விதித்திருந்தார். அதற்காக, 1977ம் ஆண்டின் சர்வதேச அவசரநிலை பொருளாதார அதிகார சட்டத்தை அவர் பயன்படுத்தினார்.

இருப்பி னும், டிரம்ப் பரஸ்பர வரி விதித்தது செல்லாது என்று கடந்த மாதம் அறிவித்த அமெரிக்க உச்ச நீதிமன்றம், அதை ரத்து செய்தது. இதையடுத்து, வர்த்தக சட்டப்பிரிவு 122ஐ பயன்படுத்தி, இந்தியா உள்ளிட்ட அனைத்து வர்த்தக கூட்டாளிகளுக்கும் டிரம்ப் 10 சதவீதம் கூடுதல் வரி விதித்தார். அந்த சட்டப்பிரிவின் கீழ், 150 நாட்களுக்கு மட்டுமே வரி விதிக்க முடியும்.

இந்த நிலையில், சட்டப்பிரிவு 301ன் கீழ் தற்போது இந்தியா உள்ளிட்ட 16 நாடுகளுக்கு எதிராக அமெரிக்க வர்த்தக அமைச்சகம் விசாரணையை துவக்கியுள்ளது. இதன் வாயிலாக, தற்போது அமலில் இருக்கும் 10 சதவீத வரி காலாவதியான பின், இந்த சட்டப்பிரிவை பயன்படுத்தி டிரம்ப் கூடுதல் வரி விதிப்பை தொடர முடியும் என்று கூறப்படுகிறது.

இந்தியாவின் சோலார் செல் உற்பத்தி திறன், தற்போது உள்நாட்டு தேவையை விட கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாக உள்ளது.

இது சர்வதேச சந்தையில் அளவுக்கு அதிகமான ஏற்றுமதிக்கு வழிவகுக்கலாம் என கவலை தெரிவித்து வரும் அமெரிக்கா, விசாரணையில் இந்த விவகாரத்தையும் சேர்த்துள்ளது.

இது தவிர ஸ்டீல், பெட்ரோ கெமிக்கல்ஸ், ஜவுளி மற்றும் வாகன உற்பத்தி துறைகளும் இந்த விசாரணையின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளன.

Source link