திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். கடந்த முறை தேர்தலில் இங்கு வெற்றி பெற்ற நிலையில், இந்த தேர்தலில் அவர் வெற்றி வாய்ப்பினை இழந்து இருந்தார். அவருடைய இந்த தேர்தல் திமுகவினர் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது பரபரப்பினை கிளப்பியுள்ளது.
சட்டமன்ற தேர்தல் முடிந்து இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் தேர்தல் வெற்றிகள் குறித்து வரிசையாக வழக்குகள் தொடரப்பட்டு வருகிறது. முதல்வர் விஜய், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரின் வெற்றியை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டது. இதனிடையில் முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தனது வேட்புமனுவில் சில தகவல்களை மறைத்துள்ளதாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்ட திருஞானசம்பந்தம் என்பவர் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக புகார் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில் திமுக அறக்கட்டளையின் நிர்வாகியாக இருப்பதை மு.க. ஸ்டாலின் தாக்கல் செய்ட வேட்புமனுவில் தெரிவிக்கப்படவில்லை. அறக்கட்டளை சார்பாக செங்கல்பட்டு மாவட்டம், கடம்பாடியில் 2 கோடியே 27 லட்சம் ரூபாய்க்கு சொத்து வாங்கிய விவரமும் தெரிவிக்கப்படவில்லை.
இது சம்பந்தமாக தேர்தல் ஆணையத்துக்கு விசாரணை நடத்துவதற்கு உத்தரவிட வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது. அதோடு விசாரணை நடத்துமாறு தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே என்னுடைய மனுவை பரிசீலித்து விசாரணை நடத்த வேண்டும். குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருந்தால் தேர்தல் ஆணையத்துக்கு சட்டப்படி நடவடிக்கை எடுப்பதற்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், வேட்புமனுவில் அறக்கட்டளை குறித்த விவரங்களை சமர்ப்பிக்க அவசியமில்லை என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி. வில்சன் தெரிவித்தார். தொடர்ந்து இரு தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டனர்.
இதனையடுத்து 29 ஆம் தேதிக்கு இந்த வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் வெற்றி வாய்ப்பினை இழந்த நிலையில், தமிழ்நாட்டில் நடக்கவுள்ள இடைத்தேர்தலில் அவர் போட்டியிட வேண்டுமென திமுகவை சார்ந்தவர்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். குறிப்பாக முதல்வர் ஜோசப் விஜய் ராஜினாமா செய்த திருச்சி கிழக்கில் அவர் களமிறங்க வேண்டும் என்றும் குரல்கள் வலுத்து கொண்டிருக்கின்றன.
இது திமுகவினர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது. தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் 7 தொகுதிகள் காலியாக உள்ள நிலையில், விரைவில் அங்கு இடைத்தேர்தல் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமான முன்னெடுப்பினை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.
