மூணாறு: ஈரான் நாட்டிற்கு கப்பல் பயிற்சிக்கு சென்ற மகனை மீட்குமாறு பெற்றோர் கேரள முதல்வர் உள்பட பலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
கேரளம் மாநிலம் இடுக்கி மாவட்டம் கட்டப்பனை அருகே அய்யப்பன்கோவில் பகுதியைச் சேர்ந்த ஜோஸ், லைசம்மா தம்பதியினரின் மகன் ஜெரின்ஜோசப் 23, சென்னையில் தனியார் கல்வி நிறுவனத்தில் வணிக கப்பல் படை பிரிவில் பயின்றார். அவர் கல்வி நிறுவனம் மூலம் 2025 ஜூலை 27ல் பயிற்சிக்காக ஈரான் நாட்டிற்கு சென்றார். அங்கு கடந்தாண்டு ஆக.1ல் கப்பலில் பயிற்சியில் சேர்ந்தார்.
கடந்த ஏழு மாதங்களாக பெற்றோருடன் தொடர்பில் இருந்தவர், பிப்.27ல் இரவில் நாளை காலை தொடர்பு கொள்வதாக கூறி பெற்றோருக்கு அலைபேசியில் குறுந்தகவல் அனுப்பினர். அதன்பிறகு ஜெரின்ஜோசப் பெற்றோரை தொடர்பு கொள்ளாத நிலையில், அவரை பெற்றோரும் தொடர்பு கொள்ள இயலவில்லை.
சென்னையில் உள்ள கல்வி நிறுவனத்தை பெற்றோர் அணுகியபோது, ஜெரின்ஜோசப் உள்பட மாணவர்கள் ஈரானில் பாதுகாப்பாக உள்ளனர் எனவும், போர் முடிந்ததும் திரும்புவார் எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் இடையே போர் அதிகரித்து வருவதால் அச்சமடைந்த ஜெரின் ஜோசப்பின் பெற்றோர் ஈரானில் சிக்கி உள்ள மகனை மீட்குமாறு கேரள முதல்வர் பினராயிவிஜயன், மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி, இடுக்கி எம்.பி., டீன்குரியாகோஸ் ஆகியோரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
