மூதாட்டியை கடப்பாரையால் தாக்கி 38 பவுன் நகை துணிகர கொள்ளை

குன்னம்:

பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது வாலிகண்டபுரம் கிராமம். இங்குள்ள முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் சையதுகான். இவரது மனைவி தாராபி (வயது 65). வயதான இந்த தம்பதியினர் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று இரவு அனைவரும் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றனர். இதில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மாடி அறையில் தூங்கினர். தாராபி மட்டும் வீட்டின் கீழ் அறையில் தூங்கினார். நள்ளிரவு சுமார் 1.30 மணியளவில் வீட்டின் பின்பக்க சுவர் ஏறிக்குதித்து 4 மர்ம நபர்கள் உள்ளே புகுந்தனர்.

முகமூடி அணிந்திருந்த அவர்கள் தனியாக தூங்கிய தாராபியை தாங்கள் கொண்டு வந்திருந்த கடப்பாரையால் திடீரென்று தாக்கியுள்ளனர். இதனை சற்றும் எதிர்பாராத தாராபி ரத்த வெள்ளத்தில் மயங்கினார். பின்னர் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் தாராபி கழுத்தில் அணிந்திருந்த செயின் மற்றும் வீட்டின் பீரோவில் வைத்திருந்த மொத்தம் 38 பவுன் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்றனர்.

இன்று காலை நீண்ட நேரமாகியும் தாராபி வீட்டை திறந்து வெளியே வராதததால் சந்தேகம் அடைந்த அவரது கணவர் சையதுகான் மற்றும் உறவினர்கள் கதவை தட்டினர். அப்போதும் திறக்கப்படவில்லை. இதனால் பதட்டம் அடைந்தவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு தாராபி ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

உடனடியாக இதுகுறித்து மங்களமேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் தாராபியை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பின்னரே 38 பவுன் நகைகள் கொள்ளை போனது தெரியவந்தது.

இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள மங்களமேடு போலீசார், அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் முகமூடி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதி பொதுமக்களிடையே பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

Source link