மூன்றாவது போட்டியிலேயே தொடரை வென்றிருப்பது மகிழ்ச்சி….இந்திய கேப்டன் பேட்டி

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் உள்ள ஹென்றி ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது. இந்திய அணியில் மாற்றமில்லை. நியூசிலாந்து அணியில் மேட் ஹென்றி. பெர் குசன், நாதன் சுமித் ஆகியோருக்கு பதிலாக ஆடம் மில்னே, கைல் ஜாமிசன், மேத்யூ பிஷர் இடம் பெற்றனர். தொடர்ந்து 3-வது முறையாக ‘டாஸ்’ ஜெயித்த இந்திய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

முதலில் நியூசிலாந்து அணி

இதன்படி முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 198 ரன்கள் சேர்த்தது. டேரில் மிட்செல் 89 ரன்களும் (52 பந்து, 5 பவுண்டரி, 5 சிக்சர்). பின் ஆலென் 40 ரன்களும் (25 பந்து, 5 சிக்சர்) எடுத்தனர்.

ஒரு கட்டத்தில் நியூசிலாந்து 11 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 113 ரன்கள் எடுத்திருந்ததை பார்த்த போது எப்படியும் 220-230 ரன்களை எட்டுவார்கள் போல் தோன்றியது. ஆனால் இந்திய பவுலர்கள் சாதுர்யமாக பந்து வீசி கட்டுப்படுத் தினர். குறிப்பாக இந்த மைதானத்தில் பக்கவாட்டு பகுதியை விட நேர் பவுண்டரி அதிக தூரம் (80 மீட்டர்) கொண்ட தாகும். மைதானத்தின் இந்த வடிவமைப்பை சரியாக புரிந்து கொண்ட இந்திய பவுலர்கள் யார்க்கர், புல்டாஸ்களை அதிக அளவில் வீசினர். 12 புல்டாஸ்கள் வீசியும் அதில் ஒரு பந்தை மட்டுமே எதிரணி பவுண்டரி அடித்தது குறிப்பிடத்தக்கது. இந்திய தரப்பில் அர்ஷ்தீப்சிங், அக்ஷர் பட்டேல், நிதிஷ்குமார் ரெட்டி தலா ஒரு விக்கெட் கைப்பற்றினர்.

சூர்யவன்ஷி – அபிஷேக்

பின்னர் 199 இலக்கை நோக்கி இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக வைபவ் சூர்யவன்ஷியும். அபிஷேக் ஷர்மா வும் களம் புகுந்தனர். பவுண்டரியுடன் ரன் கணக்கை தொடங்கிய இவர்கள் முதல் ஓவரிலேயே 26 ரன்கள் சேகரித்து அமர்க்களப்படுத்தினர். தொடர்ந்து நியூசிலாந்து பந்து வீச்சை துவம்சம் செய்து ரசிகர்களுக்கு விருந்து படைத்தனர். பந்து இடைவிடாது சிக்சர், பவுண்டரிக்கு ஓடிக் கொண்டிருந்தது. ஏதோ ஹைலைட்ஸ் போல் பார்க்கவே பிரமிப்பாக இருந்தது. 2.2 ஓவர்களில் 50 ரன்களை எட்டிய இந்தியா 5 ஓவர்களில் 100 ரன்களை தொட்டது. இதற்கிடையே அபி ஷேக் ஷர்மா 15 பந்துகளில் அரைசதத்தை கடந்தார்.

‘பவர்-பிளே’ யான முதல் 6 ஓவர்களில் சூர்யவன்ஷி – அபிஷேக் ஜோடி 118 ரன்கள் திரட்டி புதிய வரலாறு படைத்தது. சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் ‘பவர்-பிளே’ யில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ஸ்கோர் இது தான். இதற்கு முன்பு 2001-ம் ஆண்டில் செர்பியாவுக்கு எதிராக ருமேனியா 5.4 ஓவர்களில் 116 ரன்கள் எடுத்ததே இந்த வகையில் அதிகபட்சமாக இருந்தது.

அணியின் ஸ்கோர் 133-ஆக (7.1 ஓவர்) உயர்ந்த போது சூர்யவன்ஷி 45 ரன்களில் (19 பந்து, 4 பவுண்டரி, 4 சிக்சர்) பிஷரின் பந்துவீச்சில் கேட்ச் ஆனார்.

ருத்ரதாண்டவமான பேட்டிங்

மறுமுனையில், ருத்ரதாண்டவமான பேட்டிங்கால் நியூசிலாந்து பவுலர்களை கதறடித்த அபிஷேக் ஷர்மா 35 பந்து களில் 4-வது சதத்தை நிறைவு செய்தார். தனது முந்தைய அதிவேக சதத்தை சமன் செய்ய (30 பந்தில்) ஒரு சிக்சர் தேவைப்பட்ட போது. அபிஷேக் சற்று தடுமாறி விட்டார்.

செஞ்சுரிக்கு பிறகு மேலும் ஒரு சிக்சர், பவுண்டரி தெறிக்க விட்ட அபிஷேக் ஷர்மா. ஜாமிசனின் அதே ஓவரில் கேட்ச் ஆகிப் போனார். அபிஷேக் 113 ரன்களில் (38 பந்து, 9 பவுண்டரி. 11 சிக்சர்) வெளியேறினார். அடுத்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 5 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.இந்திய அணி 13.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

வெற்றி தொடர்பாக பேசிய இந்திய அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கூறியதாவது,

வீரர்கள் விளையாடிய விதம் கண்களுக்கு விருந்தாக இருந்தது. அவர்கள் அடித்த ஷாட்கள் அனைத்தும் மிகவும் அற்புதமாக இருந்தன. சஞ்சுவும் நானும் பேட்டிங் செய்யச் சென்றபோது பந்து நன்றாக ஸ்விங் ஆனது. அப்படிப்பட்ட சூழலில் அவர்கள் எப்படி இவ்வளவு சிறப்பாக விளையாடினார்கள் என்று வியந்தேன். இது உண்மையிலேயே பிரமிக்க வைக்கும் ஆட்டம். 5 ஓவர்களில் 100 ரன்கள் குவிப்பதை நான் இதுவரை பார்த்ததில்லை, குறிப்பாக சர்வதேச கிரிக்கெட்டில். இந்த பேட்டிங் செயல்பாடு நிச்சயமாக மிகச் சிறந்த ஆட்டங்களில் ஒன்றாக இருக்கும்.

வெளிநாட்டு மைதானங்களில் விளையாடும்போது சூழ்நிலைகள் மாறுபடும்; பல்வேறு வகையான பந்துவீச்சுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அத்தகைய சவால்களைத் தாண்டி வீரர்கள் இவ்வளவு அபாரமாக விளையாடியது பாராட்டுக்குரியது. மூன்றாவது போட்டியிலேயே தொடரை வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இன்னும் இரண்டு போட்டிகள் உள்ள நிலையில், இதே ஆட்டத்திறனை அவர்கள் தொடர்ந்து வெளிப்படுத்துவார்கள் என்று நம்புகிறேன். ஆரம்பத்தில் ஏற்பட்ட பயணக் களைப்பையும் தாண்டி, வீரர்கள் இந்தப் போட்டியில் தங்களைச் சிறப்பாகத் தயார்படுத்திக் கொண்ட விதம் வியப்பளிக்கிறது.

முடிந்தவரை யார்க்கர் பந்துகளை வீசுமாறு பந்துவீச்சாளர்களிடம் கூறினேன். ஆறு பந்துகளையும் யார்க்கராக வீசினாலும் பரவாயில்லை என்றும், பேட்டர்களை நேராக அடிக்க வைக்க வேண்டும் அல்லது வைடு யார்க்கர்களை வீச வேண்டும் என்றும் அறிவுறுத்தினேன். இந்த மைதானத்தில் அது உதவும் என்று நம்பினோம். எங்களது திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம். ரன் ரேட்டை 8 முதல் 9 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது, எதிரணியை ஓவருக்கு 10 ரன்கள் என்ற அளவிலேயே வைத்திருக்க உதவியது. எங்களது இலக்கு எதிரணியை 200 ரன்களுக்குள் கட்டுப்படுத்துவதுதான்” என்றார்.

Source link