மூன்று மாநிலங்களில் வகுப்புவாத மோதல்; பதற்றத்தை தணிக்க போலீசார் குவிப்பு

ஜபல்பூர்: கர்நாடகா, தெலுங்கானா, மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் வகுப்புவாத மோதல் அரங்கேறியதையடுத்து, அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளன. எனினும், மூன்று சம்பவங்களிலும், உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.

கல் வீச்சு

கர்நாடகாவின் பாஹல்கோட்டில், மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளை முன்னிட்டு, சிவாஜி ஜெயந்தி ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. இந்த ஊர்வலம், அங்குள்ள மசூதி வழியாக சென்றபோது, மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.

இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதில், ஒரு கல், அங்கு பாதுகாப்பு பணியை மேற்பார்வையிட்ட மாவட்ட எஸ்.பி., சித்தார்த் கோயல் மீது விழுந்தது. இதில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது.

ஊர்வலத்தின் போது டி.ஜே., எனப்படும் அதிக சத்தத்துடன் எழுப்பப்படும் இசை நிகழ்ச்சியால் முஸ்லிம்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.

இதையடுத்து, பாஹல்கோட் பகுதியில் நேற்று முன்தினம் முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக, எட்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல், தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதின் ஆம்பர்பேட்டையில் ரம்ஜான் தொழுகையின் போது, அங்குள்ள மசூதி அருகே சிவாஜி ஜெயந்தி ஊர்வலம் சென்றது.

அப்போது ஹிந்து அமைப்பினர், அதிக சத்தத்துடன் இசை முழக்கமிட்டபடி சென்றதால், முஸ்லிம் தரப்பில் எதிர்ப்பு தெரிவித்தனர்.

தடியடி

இதனால், இரு தரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது, சிறிது நேரத்தில் கைக்கலப்பாக மாறியது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், மோதலை தடுத்து நிறுத்தினர்.

இதில், யாருக்கும் காயமோ, அப்பகுதியில் உள்ள சொத்துக்களுக்கு சேதமோ ஏற்படவில்லை. பதற்றத்தை தணிக்க, அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே மத்திய பிரதேசத்தில் ஜபல்பூரின் சிஹோரா பகுதியில் உள்ள துர்கா கோவில் வளாகம் மர்ம நபர்களால் சேதப்படுத்தப்பட்டது. இக்கோவிலில் நேற்று முன்தினம் மாலை ஆரத்தி வழிபாடும் அருகே உள்ள மசூதியில் பிரார்த்தனையும் ஒரே நேரத்தில் நடைபெற்றபோது இச்சம்பவம் அரங்கேறி உள்ளது.

இதனால் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டதுடன், கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டதால், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தடியடி நடத்தியும், கண்ணீர் புகைக்குண்டுகளை வீசியும் கலைத்தனர்.

இதைத்தொடர்ந்து, கோவில் மற்றும் மசூதி அருகே போலீசார் குவிக்கப்பட்டனர். இச்சம்பவம் தொடர்பாக, 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link