வேலூர் மாவட்டம் கருதும்புத்தூர் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மகேஸ்வரி தம்பதியின் மூன்றாவது மகளான நர்மதா இவருக்கும் சென்னையை சேர்ந்த திருவேங்கடம் என்பவருக்கும் நான்கு மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருவேங்கடம் சென்னையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இப்புதுமன தம்பதியினர் கடந்த சனிக்கிழமை (21.03.2026) அன்று சென்னையில் இருந்து ராணிப்பேட்டைக்கு விசேஷத்திற்கு வந்துள்ளனர். அப்போது அவர்கள் பயணித்த இரு சக்கர வாகனம் காஞ்சிபுரம் பகுதி அருகே வரும்போது டாட்டா ஏஸ் வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் நர்மதாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் சிக்கிய தம்பதியினரை மீட்டு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை அளித்த மருத்துவர், நர்மதாவின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உடனடியாக உயிர் சிகிச்சை அளிக்க அறிவித்துள்ளனர். இதனையடுத்து குடும்பத்தார் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்மதாவை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சையில் இருந்த நர்மதா கடந்த திங்கட்கிழமை அன்று இரவு 07:10 மணி அளவில் மூளைச் சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து குடும்பத்தார் நர்மதாவின் உடல் உறுப்பை தானம் செய்ய முன்வந்துள்ளனர். இதனை அடுத்து நர்மதாவின் இதயம், சிறுநீரகம், நுரையிரல், கல்லீரல் உள்ளிட்ட உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது.
உடல் உறுப்பு செய்யப்பட்ட நர்மதாவுவின் உடல் சொந்த ஊரான வேலூர் மாவட்டம் கருகம்பத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அவருக்கு அரசு மரியாதையும் செலுத்தப்பட்டது பின்னர் அவர் உடல் தகனம் செய்யப்பட்டது. உடல் உறுப்பு தானம் செய்யப்பட்ட நர்மதாவின் தாய் மகேஸ்வரி அளித்த பேட்டியில், “எனக்கு மொத்தம் மூன்று பெண் பிள்ளைகளும் ஒரு மகனும் உள்ளனர். எனது மூன்றாவது மகளுக்குத் திருமணமாகி நான்கு மாதங்களே ஆகிறது. அவள் சென்னையிலிருந்து ஒரு விசேஷத்திற்காக ராணிப்பேட்டைக்கு வந்து கொண்டிருந்தாள். வரும் வழியில் குறுக்கே வந்த வண்டி இண்டிகேட்டர் போடவில்லை. அதே சமயம், பைக்கில் வந்த என் மகள் தலைக்கவசம் அணியவில்லை. என் மருமகன் தலைக்கவசம் அணிந்திருந்தார். இரண்டு வண்டிகளும் மோதிக்கொண்டதில், என் மூன்றாவது மகள் மூளைச் சாவு அடைந்தாள். என் மருமகனுக்குக் கை, கால் முறிவு ஏற்பட்டது. என் மகளை நாங்கள் இழந்துவிட்டோம்.
​
​என் மகள் மூளைச் சாவு அடைந்ததால், அவளுடைய உடல் உறுப்புகளைத் தானம் செய்ய என் பிள்ளைகள் கூறினார்கள். மண்ணோடு போவதை விட, மற்ற சிலருக்கு வாழ்வு கிடைக்கட்டும் என்ற நல்லெண்ணத்தில், முழுச் சம்மதத்துடன் அவள் கண்களைத் தவிர மற்ற அனைத்து உடல் உறுப்புகளையும் தானம் செய்துள்ளோம். இதன் மூலம் நான்கு பேர் உயிர் வாழட்டும் என நினைக்கிறோம். என் மகள் செய்த தவறால் (தலைக்கவசம் அணியாததால்) இன்று அவள் உயிர் போய்விட்டது. எங்கள் குடும்பம் லட்சுமியை இழந்து நிற்கிறது. இதுபோல ஒரு நிலை வேறு எந்தக் குடும்பத்திற்கும் வரக்கூடாது. தயவு செய்து இருசக்கர வாகனத்தில் பயணிக்கும்போது இருவருமே தலைக்கவசம் அணிந்து செல்லுங்கள். இதுவே எனது தாழ்மையான வேண்டுகோள் என்றார்.
