தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23-ந்தேதி நடைபெறுகிறது. தேர்தல் வாக்குப்பதிவிற்கு இன்னும் 12 நாட்கள் மட்டுமே உள்ளதால் அரசியல் கட்சி தலைவர்கள் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முதமைச்சரும் தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் திருவாரூரில் முதற்கட்ட பிரசாரத்தை தொடங்கி திருச்சியில் முடித்தார். இதைத்தொடர்ந்து 2-ம் கட்டமாக நெல்லையில் இருந்தும், 3-ம் கட்டமாக கடந்த 6-ந்தேதி புதுச்சேரியிலும் பிரசாரத்தை முடித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று 4-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தஞ்சாவூரில் தொடங்குகிறார்.
இந்நிலையில் சென்னை மெட்ரோ ரெயிலில் மக்களோடு மக்களாக பயணித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
சென்னை சென்ட்ரல் முதல் தேனாம்பேட்டை வரை மெட்ரோ ரெயிலில் பயணித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுடன் அமர்ந்து கலந்துரையாடினார்.
அப்போது, முதலமைச்சரிடம் திமுக அரசின் திட்டங்களை கூறி மக்கள் நன்றி தெரிவித்தனர்.
இதையடுத்து திமுக ஆட்சி மீண்டும் வருவதற்கு ஆதரவு தருமாறு மெட்ரோ பயணிகளிடம் முதலமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
மெட்ரோ ரெயிலில் பயணித்து வாக்கு சேகரித்த முதலமைச்சரிடம் கலந்துரையாடிய பயணிகள் ஆர்வத்துடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.
