மெல்போர்ன் : உலக அளவில் எரிபொருள் விலை உயர்வால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் இரண்டு மாகாணங்களில், பொது போக்குவரத்து இலவசமாக்கப்பட்டுள்ளது.
மேற்காசிய பிராந்தியத்தில் நீடிக்கும் போர் காரணமாக, ஹார்முஸ் ஜலசந்தி கடல்பகுதி மூடப்பட்டதால், கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது.
இதனால், உலக அளவில் எரிசக்தி வினியோகம் பெரிதும் பாதிக்கப்பட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க பல்வேறு நாடுகளில் போக்குவரத்திலும், எரிபொருள் விற்பனையிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவில் தட்டுப்பாடு காரணமாக பெட்ரோல் விலை, லிட்டருக்கு 160 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், அத்தியாவசிய பொருட்களின் விலை அங்கு கணிசமாக உயர்ந்துள்ளது.
மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த சிரமத்தை குறைக்கும் வகையில், விக்டோரியா மாகாணத்தில் ஏப்ரல் முழுதும் ரயில், டிராம், பஸ் உள்ளிட்ட பொது போக்குவரத்து இலவசமாக்கப்பட்டுள்ளது. தாஸ்மேனியா மாகாணத்திலும் பஸ் மற்றும் படகுப் போக்குவரத்து ஜூலை 1ம் தேதி வரை இலவசமாக்கப்பட்டுள்ளது.
