மேகதாது விவகாரம்: கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயம்.. முதல்வரை சாடிய உதயநிதி ஸ்டாலின் – dmk udhayanidhi stalin urges the tvk government regarding the mekedatu issue

தமிழ்நாடு – கர்நாடக மாநிலங்களுக்கு இடையிலான மேகதாது அணை விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமாக அதிகரித்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் தமிழக சட்டப்பேரவையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக அனைத்து கட்சி ஒப்புதலுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனிடையில் மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடகாவிற்குத் தேவை இல்லை என ஒன்றிய இணை அமைச்சர் தெரிவித்துள்ளது இரு மாநிலங்களுக்கு இடையிலான பதட்டத்தை அதிகப்படுத்தியுள்ளது. இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தளத்தில் தவெக அரசினை விமர்சித்து பதிவு ஒன்றினை பகிர்ந்துள்ளார்.

அதாவது பாமக எம்பி அன்புமணி மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வ கேள்வி எழுப்பியிருந்தார். இதனையடுத்து ஜல் சக்தி துறை இணை அமைச்சர் ராஜ் பூஷன் சௌத்ரி அவரின் கேள்விக்கு பதிலளித்தார். காவிரி ஆற்றின் குறுக்கே எந்தவிதமான கட்டுமான பணிகளையும் மேற்கொள்வதற்கு, தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசம் உள்ளிட்ட காவிரியை கடந்து செல்லும் ஏனைய பிற மாநிலங்களின் ஒப்புதலை கர்நாடக மாநில பெற வேண்டுமென 16.02.2018 நாளிட்ட மாண்புமிகு உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் எங்கும் தெரிவிக்கப்படவில்லை என தெரிவித்து இருந்தார்.

அவருடைய இந்த பேச்சு தமிழக அரசியல் களத்தில் பரபரப்பினை கிளப்பியுள்ளது. இதனையடுத்து இவ்விவகாரத்தில் தவெக அரசின் நிலைப்பாடு என்ன என்று தமிழக அரசியல் கட்சிகள் கேள்விகளை அடுக்கி வருகின்றன. அந்த வகையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் காட்டமாக தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது, மேகதாது அணை கட்டுவதற்கு தமிழ்நாட்டின் அனுமதி கர்நாடக மாநிலத்திற்கு தேவை இல்லை என்ற ஒன்றிய இணை அமைச்சரின் பதில் காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை கேள்விக்குறியாக்கி உள்ளது. டெல்லி எஜமானர்களை பகைத்துக் கொள்ளாமலும் – ஆட்சிக்கட்டிலைக் காப்பாற்றுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பேசாமலும், முதலமைச்சர் தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துள்ளார் என்ற விமர்சனத்தை தனது பதிவில் முன்வைத்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.

தொடர்ந்து அவருடைய பதிவில், சட்டப்பேரவையில் இந்த பிரச்சனையில் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள் ஓரணியில் சென்று மேகதாதுவுக்கு எதிராக ஒன்றிய அரசிடம் குரல் கொடுக்க வேண்டும் என்று பேசி இருந்தேன். கர்நாடகாவில் பட வசூல் பாதிக்கும் என்ற பயத்தில் இந்த சோஃபா மாடல் முதலமைச்சர், எதிர்க்கட்சிகள் சொன்னதையும் கேட்கவில்லை. விவசாயிகள் உடைய கோரிக்கையினையும் ஏற்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் இனியும் காலம் தாழ்த்தினால் தமிழ்நாட்டு விவசாயிகளுடைய வாழ்வாதாரம் முற்றிலும் பறிபோகும். எனவே, மேகதாது அணை கட்டும் முயற்சியை முறியடிப்பதற்கு முதலமைச்சர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு தன்னுடைய பதிவில் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளது, தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது.

விஜய்யின் ஜனநாயகன் படம் கடந்த 23 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது. இந்நிலையில் கர்நாடகாவில் இப்படத்தின் வசூல் பாதிக்கும் என்ற பயத்தில் முதலமைச்சர் அமைதி காப்பதாக உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link