மயாமி: மெஸ்ஸி, லுாயிஸ் சாரஸ் தலா ஒரு கோல் அடித்து கைகொடுக்க, இன்டர் மயாமி, ஆஸ்டின் அணிகள் மோதிய எம்.எல்.எஸ்., கால்பந்து லீக் போட்டி 2-2 என ‘டிரா’ ஆனது.
அமெரிக்கா, கனடாவில், மேஜர் லீக் கால்பந்து (எம்.எல்.எஸ்.,) 31வது சீசன் நடக்கிறது. மயாமியில் நடந்த லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ இன்டர் மயாமி, ஆஸ்டின் எப்.சி., அணிகள் மோதின. ஆட்டத்தின் 6வது நிமிடத்தில் ஆஸ்டின் அணிக்கு கில்ஹெர்மி பிரோ ஒரு கோல் அடித்தார். இதற்கு, 10வது நிமிடத்தில் மயாமி அணியின் மெஸ்ஸி, ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். முதல் பாதி 1-1 என சமநிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியின் 53வது நிமிடத்தில் ஆஸ்டின் அணியின் நெல்சன் ஒரு கோல் அடித்து, 2-1 என முன்னிலை பெற்றுத்தந்தார். தொடர்ந்து போராடிய மயாமி அணிக்கு 81வது நிமிடத்தில் லுாயிஸ் சாரஸ் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். பின், இரு அணி வீரர்களால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை.
ஆட்டநேர முடிவில் போட்டி 2-2 என ‘டிரா’ ஆனது.
புதிய மைதானம்
இப்போட்டி இன்டர் மயாமி அணிக்கு சொந்தமான புதிய ‘நு’ மைதானத்தில் (இடம்: மயாமி, புளோரிடா) நடந்தது. மொத்தம் 26,700 இருக்கைகள் கொண்ட இம்மைதானத்தின் ஒரு பகுதிக்கு, லயோனல் மெஸ்ஸியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்கு நடந்த முதல் போட்டியில் மெஸ்ஸி கோல் அடித்தது ஸ்பெஷல்.
