மேற்காசியாவில் மூண்டது போர்: இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு

டெஹ்ரான்: அமெரிக்காவும், இஸ்ரேலும் இணைந்து ‘ஆப்பரேஷன் எபிக் பியூரி’ என்ற பெயரில் ஈரான் மீது மிகப்பெரிய வான்வழி தாக்குதலை துவங்கியுள்ளன. இதனால், மேற்காசியாவில் போர் மூண்டுள்ளது.

மேற்காசிய நாடான ஈரான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இடையே, 2015ல் அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தன் முதல் பதவி காலத்தின்போது, 2018ல் இந்த ஒப்பந்தத்தில் இருந்து விலகினார். இதைத் தொடர்ந்து ஈரான் மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன.

அணு ஆயுதங்கள்

தன்னிடம் அபரிமிதமாக உள்ள யுரேனியம் தாதுவை ஈரான் செறிவூட்டி வந்தது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்காகவே, யுரேனியத்தை ஈரான் செறிவூட்டி வருவதாக, மற்றொரு மேற்காசிய நாடான இஸ்ரேல் குற்றஞ்சாட்டியது. மேலும் ஈரான் தங்கள் மீது தாக்குதல் நடத்தும் அபாயம் உள்ளதாகவும் இஸ்ரேல் தொடர்ந்து கூறி வந்தது.

கடந்தாண்டு ஜன.,ல் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பின், சில முக்கிய அம்சங்களை சேர்த்து ஈரானுடன் மீண்டும் அணுசக்தி ஒப்பந்தம் மேற்கொள்ள டிரம்ப் ஆர்வம் தெரிவித்தார். ஆனால், ஈரான் மசிந்து கொடுக்கவில்லை. இதற்கிடையே, கடந்தாண்டு ஜூன் மாதம், அணுஆயுதங்களை தயாரிப்பதாகக் கூறி, ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தின. அதில், ஈரானின் முக்கிய அணுசக்தி மையங்களை அழித்ததாகவும் அமெரிக்கா கூறியது.

போராட்டம்

ஆனால், ஈரான் தொடர்ந்து யுரேனியத்தை செறிவூட்டும் முயற்சியில் ஈடுபட்டு வந்தது.இதற்கிடையே, ஈரானில் பொருளாதார பின்னடைவு காரணமாக விலைவாசி உயர்ந்துள்ளதைக் கண்டித்து அந்நாட்டு மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தை ஒடுக்க பாதுகாப்புப் படைகளை ஏவிய ஈரான் அரசு, தடைகளை மீறி போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியதில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராணுவ நடவடிக்கை

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை ஏற்க முடியாது எனவும், அவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தினால், அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் என கூறினார்.மேலும், அமெரிக்க போர் கப்பல்களை ஈரான் கடற்பகுதிகளுக்கும் அனுப்பி வைத்தார். அணுசக்தி திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட, ஈரானுக்கு டிரம்ப் நிர்வாகம் அழுத்தம் கொடுத்தது.

பேச்சுவார்த்தை

இதையடுத்து, அணுசக்தி திட்டம் குறித்து பேச்சு நடத்த ஈரான் சம்மதம் தெரிவித்தது. இதற்கு மத்தியஸ்தம் செய்ய மேற்காசிய நாடான ஓமன் ஒப்புக்கொண்டது. ஏற்கனவே, ஓமன் தலைநகர் மஸ்கட்டில் கடந்த, 6ம் தேதி முதற்கட்டமாகவும், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில், 17ல் இரண்டாம் கட்டமாகவும் அமெரிக்கா -  ஈரான் இடையே இரு சுற்று மறைமுக பேச்சுக்கள் நடத்தன. பின்னர், நடந்த மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையிலும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

இந்நிலையில் இஸ்ரேலுடன் இணைந்து ஆப்பரேஷன் எபிக் பியூரி என்ற பெயரில் ஈரான் மீது இன்று மிகப்பெரிய வான்வழி தாக்குதலை அமெரிக்கா நடத்தியது. ஈரான் தலைநகர் டெஹ்ரானின் பல பகுதிகளில் குண்டு வீசப்பட்டன. குறிப்பாக, ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அலுவலகம் மற்றும் அவரின் குடியிருப்பு பகுதி அருகில் ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டது. அதிபர் மாளிகை, தேசிய பாதுகாப்பு கவுன்சில் அலுவலகம், உளவுத்துறை அமைச்சகம், ராணுவ அமைச்சக அலுவலகங்கள் உள்ளிட்டவை தாக்குதலுக்குள்ளாகிய முக்கிய இடங்களாகும்.

குண்டு வீச்சு

அணுசக்தி தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இஸ்பஹான், முக்கிய ராணுவ வளாகம் மற்றும் ஏவுகணை சோதனை தளம் அமைந்துள்ள பார்ச்சின், ஈரானின் ஒரே அணு மின் நிலையம் அமைந்துள்ள துறைமுக நகரமான புஷெர் ஆகிய நகரங்களிலும் குண்டு வீச்சு நடந்துள்ளது. ஆன்மிக மையமாகவும், நிலத்தடி அணுசக்தி நிலையங்களை கொண்டதாகவும் உள்ள கும், ஏவுகணை தயாரிப்பு மற்றும் பாதுகாப்பு தளங்கள் உள்ள கராஜ் மற்றும் கர்மான்ஷா, ஏவுகணை தளங்கள் உள்ள வடமேற்கு ஈரானின் தப்ரீஸ், இலாம் மற்றும் லொரெஸ்தான் உள்ளிட்ட நகரங்கள் குண்டு வீசி தாக்கப்பட்டன.

தாக்குதலுக்கு பின், டெஹ்ரானின் பல பகுதிகளில் மொபைல்போன் மற்றும் இணைய தள சேவைகள் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளன. ஈரான் ராணுவத்தின் பல தலைமையகங்கள் மற்றும் ராணுவ முகம்கள் குண்டு வீச்சில் அழிக்கப்பட்டுள்ளன. இதில் ஆயிரக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வான்வெளி மூடல்

ஈரானின் அணுசக்தி மற்றும் ஏவுகணை திறனை முழுதுமாக அழிப்பதே இத்தாக்குதலின் நோக்கம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஈரான் இதற்கு பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதுடன், தன் வான்வெளியையும் மூடியுள்ளது. ஈரான் மட்டுமின்றி, இஸ்ரேல், ஜோர்டான் ஆகிய நாடுகளும் தங்கள் வான்வெளியை தற்காலிகமாக மூடியுள்ளன.

இந்நிலையில், ஈரான் தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் நாடு முழுதும் அவசரநிலையை அறிவித்துள்ளது. பள்ளிகள் மூடப்பட்டு, மக்கள் பாதுகாப்பு அறைகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஈரான் தலைவர் கமேனி தற்போது பாதுகாப்பான இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதல்கள்

ஈரானில் அமெரிக்காவும் இஸ்ரேலும் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், சவுதி அரேபியா உட்பட மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் எதிர் தாக்குதல் நடத்தியுள்ளது. மேலும் இஸ்ரேல் மீதும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

இதனால், மேற்காசியாவில் போர் மூண்டுள்ளது. இந்தத் தாக்குதல்கள் தொடரும் என்று இரு தரப்பும் கூறியுள்ளதால், பதற்றம் ஏற்பட்டுள்ளது. பதிலடியாக சவுதி அரேபியா உட்பட பல மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் எதிர் தாக்குதல் நடத்தியது. இதனால், மேற்காசியாவில் போர் மூண்டுள்ளது. இதையடுத்து அந்தப் பிராந்தியத்தில் உள்ள இந்தியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பெயர் வைக்கப்பட்டது!

ஈரான் மீதான மிகப்பெரிய போர் நடவடிக்கைக்கு ‘ஆப்பரேஷன் எபிக் பியூரி’ என அமெரிக்கா பெயரிட்டுள்ளதை, சமூக ஊடக பதிவு வாயிலாக அறிவித்துள்ளது. கடந்தாண்டு ஜூனில் ஈரான் அணுசக்தி மையங்கள் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு ‘மிட்நைட் ஹேமர்’ என்றும், நடப்பாண்டு துவக்கத்தில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ கைதுக்கான நடவடிக்கைக்கு ‘ஆப்பரேஷன் அப்சலுாட் ரிசால்வ்’ என்றும் பெயரிடப்பட்டிருந்தது.

Source link