புதுடில்லி: மேற்காசியாவில் உள்ள நிலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று இரவு அவசர ஆலோசனை நடத்தினார்.
மேற்காசியாவில் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதைத் தொடர்ந்து இஸ்ரேல் மற்றும் மேற்காசிய நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்துகிறது. இதனால், மேற்காசியாவில் போர் பதற்றம் தீவிரமாக உள்ளது. இந்த நாடுகளில் இந்தியர்கள் அதிகம் உள்ளனர்.
இந்நிலையில், மதுரையில் இருந்து நேற்றிரவு டில்லிக்கு வந்த பிரதமர் மோடி, பாதுகாப்பு விவகாரங்களுக்கான அமைச்சரவை குழுவின் அவசர கூட்டத்துக்கு தலைமை தாங்கினார். இதில், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், மேற்காசியாவில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பு, கள நிலவரம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இதற்கிடையே ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சயீத்துடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, அங்குள்ள இந்தியர்களை போர் தாக்குதலில் இருந்து பாதுகாத்ததற்காக நன்றி தெரிவித்தார்.
