மேற்காசிய பதற்றத்தால் வன்முறை சம்பவங்கள் அரங்கேறலாம்: பாதுகாப்பை பலப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு

– நமது சிறப்பு நிருபர் -:

அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் நாடுகளுக்கு இடையேயான மோதலால், மேற்காசிய பிராந்தியத்தில் பதற்றமான சூழல் நிலவும் நிலையில், நம் நாட்டில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறலாம் என்பதால், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்கும்படி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டு உள்ளது.

அணு ஆயுத ஒப்பந்த விவகாரத்தில், மேற்காசிய நாடான ஈரான் அடிபணியாததால் கடுப்பான அமெரிக்கா, மற்றொரு மேற்காசிய நாடான இஸ்ரேலுடன் இணைந்து, அந்நாட்டின் மீது சமீபத்தில் தாக்குதல் நடத்தியது.

இதில், ஈரான் உச்ச தலைவர் கமேனி கொல்லப்பட்டார். இதை தொடர்ந்து, நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஈரானுக்கு ஆதரவாகவும், அமெரிக்காவுக்கு எதிராகவும் போராட்டம் நடந்தது.

இந்நிலையில், மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றத்தால், நாட்டில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறலாம் என்பதால், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கும்படி, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலர்கள், டி.ஜி.பி.,க்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதி உள்ளது.

அதன் விபரம்:

 வன்முறையை துாண்டும் வகையில் உரையாற்றும் மற்றும் ஈரானுக்கு ஆதரவான பயங்கரவாத போக்குடைய மத பிரசாரகர்களை கண்டறிந்து கண்காணிக்க வேண்டும்

 அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் துாதரகங்கள் மற்றும் துணை துாதரகங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்

 இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணியர் அதிகம் கூடும் சுற்றுலா தலங்கள் மற்றும் யூத வழிபாட்டு தலங்களில் கூடுதல் பாதுகாப்பு வழங்க வேண்டும்

 முக்கிய இடங்களில், ‘சிசிடிவி’ கேமராக்களை நிறுவி கண்காணிப்பை தீவிரப்படுத்துவதோடு, வெடி பொருட்கள் ஏதேனும் மறைத்து வைக்கப்பட்டுள்ளதா என்பதை தொடர்ச்சியாக சோதனையிட வேண்டும்

 ஈரானுக்கு ஆதரவான அமைப்புகள், அல் — குவைதா, ஐ.எஸ்., பயங்கரவாத குழுக்கள் மற்றும் மாணவர் அமைப்புகளின் சமூக ஊடக செயல்பாடு களை உன்னிப்பாக கவனிக்க வேண்டும்

 அசம்பாவிதங்களை தடுக்கவும், சட்டம் – ஒழுங்கு, பொது அமைதியை பேணவும் அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் போதிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்

 தவறான தகவல்கள் பரவுவதை தடுக்க சமூக ஊடகங்களை கண்காணிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கடிதத்தில், 1989-ல், எழுத்தாளர் சல்மான் ருஷ்டியின், ‘தி சாத்தானிக் வெர்சஸ்’ புத்தகத்திற்கு எதிராக, ஈரான் தலைவர் அயதுல்லா ருஹோல்லா கொமேனி பிறப்பித்த மரண தண்டனை உத்தரவால், மஹாராஷ்டிராவின் மும்பையில் ஏற்பட்ட வன்முறையில், 12 பேர் பலியான சம்பவத்தையும், 1990ல், குவைத் மீது ஈராக் படையெடுத்த போது, நம் நாட்டில் நடந்த அமெரிக்க எதிர்ப்பு போராட்டங்களையும் உள்துறை அமைச்சகம் சுட்டிக்காட்டி உள்ளது.

இரண்டாவது நாளாக காஷ்மீரில் போராட்டம் ஈரான் உச்ச தலைவர் கமேனி கொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், ஜம்மு – காஷ்மீரின் புல்வாமா, பெமினா, குந்த் ஹஸிபாட் ஆகிய இடங்களில் இரண்டாவது நாளாக நேற்றும் போராட்டம் நடந்தது. அப்போது, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளை கண்டித்து ஷியா பிரிவு முஸ்லிம்கள் முழக்கங்கள் எழுப்பினர். ஒருசில இடங்களில் தடையை மீறி போராட்டம் நடத்த முயன்றவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததால், பதற்றம் நிலவியது. போராட்டத்தை தடுக்கும் வகையில் போலீசார் மற்றும் துணை ராணுவப் படையினர் ஸ்ரீநகரின் முக்கிய இடங்களில் குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, லால் சவுக் பகுதியில் உள்ள புகழ்பெற்ற, ‘கண்டா கர்’ என்றழைக்கப்படும் மணிக்கூண்டு பகுதி இரும்பு வேலிகளால் மூடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை தவிர்க்க தனியார் பள்ளிகள், கல்வி நிறுவனங்கள் இரு நாட்களுக்கு மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. சட்டம் – ஒழுங்கை பாதுகாக்கவும், வதந்திகள் பரவுவதை தடுக்கவும் இன்டர்நெட் வேகம் குறைக்கப்பட்டுள்ளது.

பிரதமர் கண்டனம்

மேற்காசிய நாடுகளான சவுதி அரேபியா, பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக, அந்நாட்டு தலைவர்களுடன் தொலைபேசி மூலம் உரையாடிய அவர், அந்த பிராந்தியங்களில் அமைதியை ஏற்படுத்த இந்தியா ஆதரவு அளிக்கும் என குறிப்பிட்டார். இதுகுறித்து சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி கூறுகையில், ‘பஹ்ரைன் மன்னர் ஹமாத் பின் இசா அல் கலீபா மற்றும் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோருடன் தொலைபேசியில் உரையாடி னேன். இரு நாடுகள் மீதான தாக்குதலை, இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. ‘இந்த கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுடன் நாங்கள் துணை நிற்போம். போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், மேற்காசிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் இந்தியா ஆதரவு அளிக்கும்’ என குறிப்பிட்டுள்ளார்.

Source link