மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் காரணமாக பெட்ரோலிய பொருட்களின் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க, அவசர ஏற்பாடாக, ‘எஸ்மா’ எனப்படும் அத்தியாவசிய பொருட்கள் பராமரிப்பு சட்டத்தை நாடு முழுதும் மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. மேற்காசியாவில் ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் நடத்தி வருகின்றன. ஈரானும் பதில் தாக்குதலை தீவிரப்படுத்தி இருப்பதால், உலகம் முழுதும் பெட்ரோலிய பொருட்களின் வினியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
முன்னுரிமை ஈரானில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி மூடப்பட்டதால், கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால், நம் நாட்டில் வீட்டு பயன்பாட்டுக்கான சமையல் சிலிண்டர் விலை, சமீபத்தில் 60 ரூபாய் உயர்த்தப்பட்டது.
மும்பை, பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களில் வணிக ரீதியிலான சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.
பார்லி.,யில் இந்த விவகாரம் நேற்று முன்தினம் எதிரொலித்த நிலையில், பதில் அளித்து பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ‘எண்ணெய் வினியோக தொடர் பாதிக்கப்பட்டுள்ளது.
‘எனினும் நாட்டு மக்களின் நலனுக்கு முன்னுரிமை தரும் வகையில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது’ என தெரிவித்திருந்தார்.
அதன் அடிப்படையில் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க, ‘எஸ்மா’ எனப்படும் அத்தியாவசிய பொருட்கள் பராமரிப்பு சட்டத்தை நாடு முழுதும் மத்திய அரசு நேற்று அமல்படுத்தியது .
இது தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்த உத்தரவில், எந்தெந்த துறைகளில் வினியோகத்திற்கு முதலில் முன்னுரிமை தர வேண்டும் என்ற வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
அதன் விபரம்:
பொதுமக்கள் பயன் படுத்தும் வீடுகளுக்கான சமையல் சிலிண்டர் வினியோகம், வீடுகளுக்கு குழாய் மூலம் வினியோகிக்கும் பி.என்.ஜி., எனப்படும் குழாய் மூலம் வழங்கப்படும் இயற்கை எரிவாயு, போக்குவரத்துக்கான சி.என்.ஜி., எனப்படும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு ஆகியவற்றுக்கு முன்னுரிமை தர வேண்டும். அதே போல், வீட்டு சமையல் சிலிண்டர் உற்பத்திக்கு சுத்திகரிப்பு நிலையங்கள் முன்னுரிமை தர வேண்டும்.
உர ஆலை இரண்டாவது முன்னுரிமை உர ஆலைகளுக்கு தரப்பட வேண்டும். கடந்த ஆறு மாத நுகர்வு சராசரியில், 70 சதவீத அளவுக்கு உர ஆலைகளுக்கு எரிவாயு கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
அடுத்ததாக தேயிலை தொழிற்சாலைகள், உற்பத்தி அலகுகள் மற்றும் பிற தொழிற்சாலை நுகர்வோருக்கு கடந்த ஆறு மாத சராசரி எரிவாயு பயன்பாட்டில் 80 சதவீத வினியோகத்தை பராமரிக்க வேண்டும்.
இறுதியாக, வணிக பயன்பாட்டுக்கான நுகர் வோருக்கு கடந்த ஆறு மாதசராசரி எரிவாயு நுகர்வில், 80 சதவீதத்தை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு இல்லாமல் கிடைப்பதற்காக, ‘எஸ்மா’ எனப்படும் அத்தியாவசிய பொருட்கள் பராமரிப்பு சட்டம் கடந்த 1955ல் கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் கள்ளச்சந்தையில் பொருட்கள் பதுக்குவது, விற்பது மற்றும் செயற்கையாக தட்டுப்பாடுகளை உருவாக்குவது ஆகியவற்றை தடுக்கிறது.
கள்ளச்சந்தையில் பொருட்கள் பதுக்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்குகிறது.
அசாதாரண சூழல்களில், மக்களின் நலனுக்காகவும், பொருட்களின் தடையற்ற வினியோகத்தை உறுதி செய்யவும் இந்த சட்டம் வழிவகுக்கிறது.
– நமது சிறப்பு நிருபர் –
