'மேற்காசிய போரால், நாட்டு மக்கள் யாரும் அச்சப்படவே வேண்டாம். இந்தியாவுக்கே முன்னுரிமை என்ற கருத்தில்

‘மேற்காசிய போரால், நாட்டு மக்கள் யாரும் அச்சப்படவே வேண்டாம். இந்தியாவுக்கே முன்னுரிமை என்ற கருத்தில் பின்வாங்க மாட்டோம். போர் குறித்து பேசப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம்,” என பிரதமர் மோடி பேசினார். திருச்சியில் நேற்று நடந்த தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் மாநாட்டில், பிரதமர் மோடி பேசியதாவது:

தமிழகத்தின் நாடித் துடிப்பை என்னால் தெளிவாக கணக்கிட முடிகிறது. ஆடி மாதத்தில், காவிரி நதி கரை புரண்டோடும். அதுபோல் வரும் சட்டசபை தேர்தலில், மாற்றத்திற்கான மக்களின் ஆசையும் தீவிரமாக உள்ளது.

ஒரே குடும்பத்தில்

ஆட்சி அதிகாரத்தில் இருந்து தி.மு.க.,வை துாக்கி எறிய, ஒட்டுமொத்த தமிழகமும் முடிவு செய்து விட்டது. தமிழகத்தில் தே.ஜ., கூட்டணியால் மட்டுமே, மாற்றத்தை கொண்டு வர முடியும் என மக்கள் நம்புகின்றனர்.

திருச்சி விமான நிலையத்தை போல், மதுரை விமான நிலையத்தை, சர்வதேச விமான நிலையமாக மாற்ற முடிவு செய்துள்ளோம். இதனால், மதுரையிலிருந்து, உலக நகரங்களுக்கு, விமானப் போக்குவரத்து எளிதாகும்.

சுற்றுலாவும், வர்த்தகமும் அதிகரிக்கும். காலையில் பறிக்கப்படும் மதுரை மல்லி, மாலையில் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ், அமெரிக்காவின் நியூயார்க் நகரங்களுக்கு சென்று சேரும்.

கடந்த 2021ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க., தன் கடமையை செய்யாமல், மக்களுக்கு துரோகம் செய்து வருகிறது. தி.மு.க., ஆட்சியில், அனைத்தும் ஒரே குடும்பத்தில் துவங்கி, ஒரே குடும்பத்தில் முடிந்து விடுகிறது.

அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மாறலாம். ஆனால், அதிகாரம் மட்டும், ஒரு குடும்பத்திடம் மட்டுமே இருக்கிறது.

பணம் பெற்று மோசடி

தி.மு.க., விஞ்ஞான ஊழலுக்கு பெயர் பெற்றது. இந்த மாடல்தான், தமிழகத்தை ஒரு குடும்பத்தின் ஏ.டி.எம்., ஆக மாற்றியுள்ளது. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர், வேலை வாங்கி தருவதாக சொல்லி பணம் பெற்று மோசடியில் சிக்கிஉள்ளார்.

வேலைகள் பணத்திற்காக விற்கப்படும்போது, நடுத்தர, ஏழை இளைஞர்களின் கனவு தகர்க்கப் படுகிறது. அனைத்து ஆறுகளும் கடலில் சென்று சேருவது போல், தமிழகத்தின் ஊழல் பணம் அனைத்தும், ஒரே குடும்பத்தை சேருகிறது; அதன் குடும்ப சொத்தாக மாறுகிறது.

‘தானிய சேமிப்பு கிடங்குகள் அமைப்போம், நெல்லுக்கு உரிய விலை கொடுப்போம்’ என்ற வாக்குறுதிகளை, தி.மு.க., நிறைவேற்றாததால், டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதால், ஆறுகள் நாசமாகி உள்ளன. சுற்றுச்சூழல் மாசடைந்துள்ளது. இதற்கு காரணமானவர்களுக்கு, தி.மு.க.,வின் பாதுகாப்பு கிடைக்கிறது.

கிராம மக்களுக்கான, மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தை, தி.மு.க., அரசு தாமதப்படுத்தி வருகிறது. மத்திய அரசை மக்கள் பாராட்டிவிடுவர் என்ற பயமே, இதற்கு காரணம்.

தமிழகத்தின் வளர்ச்சிக்காக, பெரும் திட்டங்களை, மத்திய அரசு வைத்துள்ளது. சென்னை — பெங்களூரு; சென்னை — ைஹதராபாத் புல்லட் ரயில் திட்டத்தை அறிவித்துள்ளோம். இதனால் தமிழகத்தின் வளர்ச்சி அடுத்த கட்டத்திற்கு செல்லும்.

தி.மு.க., ஆட்சியில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து விட்டன. தி.மு.க., உறுப்பினரால் சிறுமிக்கு ஏற்பட்ட கொடுமையை, அனைவரும் அறிவோம். தமிழகத்தின் பெண்கள் அச்சமில்லாமல் வாழ்வதை, தேசிய ஜனநாயக கூட்டணி உறுதி செய்யும். குற்றவாளிகள்தான் பயத்துடன் வாழ்வரே தவிர, மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

மேற்காசியாவில் நடக்கும் போர், உலகின் ஒட்டுமொத்த எரிசக்தி வழங்கல் சங்கிலியை பாதித்துள்ளது. ‘இந்தியாவுக்கே முன்னுரிமை’ என்ற கொள்கையில், மத்திய அரசு உறுதியாக உள்ளது. எந்தவொரு சூழ்நிலையிலும், இந்தியர்களுக்கு முன்னுரிமை அளித்து, மத்திய அரசு செயல்பட்டு வந்திருப்பதை, அனைவரும் அறிவர்.

பீதியடைய தேவையில்லை

இப்போதும் மத்திய அரசின் அணுகுமுறை, ‘இந்தியர்களுக்கு முன்னுரிமை’ என்ற அடிப்படையிலேயே இருக்கும். எனவே யாரும் அச்சப்படவோ, பீதியடையவோ தேவையில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம். சரியான தகவலை மட்டுமே பகிர வேண்டும் என, மக்களை கேட்டுக் கொள்கிறேன்.

கொரோனா காலகட்டத்தில் இந்தியா முதிர்ச்சி அடைந்த நாடு என்பதை, 140 கோடி மக்களும் உலகிற்கு உணர்த்தினர். எந்தவொரு சூழலையும் வெற்றிகரமாக கடந்து செல்வோம் என, உறுதி அளிக்கிறேன்.

வரும் சட்டசபை தேர்தல், தமிழக வரலாற்றில், மிக முக்கியமான தேர்தல். ஊழல், குடும்ப அரசியலா; வளர்ச்சி அரசியலா என, இரு வாய்ப்புகள் உள்ளன. தமிழக மக்கள் வளர்ச்சி அரசியலை தேர்வு செய்வர். நாம் அனைவரும் இணைந்து, வளமான தமிழகத்தையும், வளர்ச்சி அடைந்த இந்தியாவையும் உருவாக்குவோம். தமிழகம் மாற்றத்தை விரும்புகிறது. இவ்வாறு பிரதமர் பேசினார்.

தமிழக வளர்ச்சிக்கு அல்லும் பகலும் உழைக்கிறோம்‘ திருச்சியில் நேற்று நடந்த அரசு விழாவில், 5,600 கோடி ரூபாய் மதிப்பிலான மத்திய அரசின் திட்டங்களை துவக்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் பிரதமர் பேசியதாவது: தமிழகத்தின் எதிர்காலத்திற்கான மின்சாரம், பெட்ரோலியம், ரயில்வே, நெடுஞ்சாலைகள், கிராமச் சாலைகள் என, 5,600 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களை துவக்கி வைத்தும், அடிக்கல் நாட்டியும் வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின், 3,700 கோடி ரூபாய் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். இதனால் நீலகிரி, ஈரோடு மாவட்ட மக்கள் பயனடைவர். இத்திட்டத்தால், 9 லட்சம் குடும்பங்களுக்கும், நுாற்றுக்கணக்கான நிறுவனங்களுக்கும் குழாய் வழியாக இயற்கை எரிவாயு கிடைக்கும். சென்னையில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சுத்திகரிப்பு ஆலை, நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது. உலகின் மிகப் பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளில் இதுவும் ஒன்று. ‘லுாப்ரிகன்ட் ஆயில்’ தயாரிப்பில் முக்கிய பங்கு வகித்து, இறக்குமதியை இந்த ஆலை குறைக்கிறது. பிரதமர் கிராமச் சாலைகள் திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்ட, 370 கி.மீ., கிராமச் சாலைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. இச்சாலைகள், கிராமங்களை மற்ற பகுதிகளுடன் இணைக்கின்றன. கடந்த ஆண்டு ஆடி திருவாதிரை விழாவுக்காக, கங்கைகொண்ட சோழபுரம் வந்திருந்தது மகிழ்ச்சியான அனுபவம். மாமன்னர் ராஜேந்திர சோழன் கட்டிய கோவிலின் கட்டுமானத்தை கொண்டாடினோம். இப்போது, அந்த வழியாகச் செல்லும் நெடுஞ்சாலைக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம். கங்கைகொண்ட சோழபுரம் கோவிலை ஒட்டி நெடுஞ்சாலை செல்வதை தவிர்க்க, சுற்றுச்சாலை அமைக்கப்பட உள்ளது.
இன்று, பல புதிய ரயில் சேவைகள் துவங்கப்பட்டுள்ளன. நாகர்கோவில், கோவை, ராமேஸ்வரம், நெல்லை, மயிலாடுதுறை, காரைக்குடி ஆகிய நகரங்களை, இந்த ரயில்கள் மற்ற பகுதிகளோடு இணைக்கின்றன. இதனால் சுற்றுலாவும், உள்ளூர் பொருளாதாரமும் வளரும். தமிழக மக்களின் நலனுக்கு முழு அர்ப்பணிப்போடு மத்திய அரசு செயல்படுகிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கு அல்லும் பகலும் உழைத்து வருகிறோம்; தொடர்ந்து உழைப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

– நமது நிருபர் –

Source link