மும்பை: மேற்காசிய போர் சூழலுக்கு மத்தியில், மும்பையில் கூடிய ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு, கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றமின்றி 5.25 சதவீதமாகவே தொடர ஒருமனதாக முடிவெடுத்துள்ளது. கூட்டத்தில் நாட்டின் நிதிநிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
பணவீக்கம் கடந்த நிதியாண்டில் நாட்டின் சராசரி பணவீக்கம் நான்கு சதவீதத்துக்கு குறைவாகவே பதிவாகியுள்ளது. மேற்காசிய போர் காரணமாக எரிபொருட்களின் விலை உயர்ந்துள்ளதால், பணவீக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. உணவு பொருட்களின் விலை பெரிய அளவில் உயராது என எதிர்பார்க்கலாம். ரூபாய் மதிப்பு உள்நாட்டு பொருளாதார காரணிகள் வலுவாக இருந்த போதிலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த நிதியாண்டில், முந்தைய நிதியாண்டுகளின் சராசரியை காட்டிலும் கூடுதலாக சரிந்தது. சந்தையில் நிலவும் தேவையற்ற பதற்றத்தை தணிக்க ரிசர்வ் வங்கி சில நடவடிக்கைகளை எடுத்தது. இவை நிரந்தரமானவை அல்ல. சந்தை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும்போது, இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படும். வட்டி விகிதம் கடன் வட்டி விகிதத்தை பொறுத்தவரை, நீண்ட காலத்துக்கு இதுபோல குறைவாகவே தொடரும். கடந்தாண்டு மட்டும் 1.25 சதவீதம் வட்டி குறைக்கப்பட்ட நிலையில், வங்கிகள் தரப்பில் இதுவரை 0.90 சதவீதம் வரை வாடிக்கையாளர்களுக்கு குறைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மற்றும் ஆர்.பி.ஐ., எடுத்த பல்வேறு நடவடிக்கைகளால், உள்நாட்டு பொருளாதார அடிப்படைகள் வலுவாக உள்ளன. ஜி. டி. பி., சேவை துறையில் நீடிக்கும் வளர்ச்சி, ஜி.எஸ்.டி., விகிதங்கள் குறைப்பால் வர்த்தக உயர்வு, நிறுவனங்களின் சிறப்பான நிதி ஆகியவை நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கும். ஏற்றுமதி 0.20 சதவீதம் சரிந்த நிலையில் இறக்குமதி 22% வளர்ச்சி கண்டுள்ளது. சஞ்சய் மல்ஹோத்ரா கவர்னர், ரிசர்வ் வங்கி
கடன் வட்டிக்கான ரெப்போ விகிதம் மாற்றமின்றி, 5.25 சதவீதமாகவே தொடரும் வீடு, வாகனம், தனிநபர், தொழில் கடன் வட்டி மாற்றமின்றி தொடர வாய்ப்பு.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள்
* மேற்காசிய போர் இந்திய பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்
*எரிசக்தி மற்றும் கமாடிட்டிகளின் விலை உயர்வு உள்நாட்டு உற்பத்தியை பாதிக்கக்கூடும்
* வங்கிகளில் போதுமான பணப்புழக்கம் இருப்பதை ஆர்.பி.ஐ., உறுதி செய்யும்
* வங்கி மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களின் அடிப்படை கட்டமைப்பு பாதுகாப்பாகவும், வலுவாகவும் உள்ளது
* அடுத்த 11 மாத இறக்குமதிகளை சமாளிக்க தேவையான அளவு அன்னிய செலாவணி கையிருப்பு உள்ளது
* அடுத்த பணக்கொள்கை குழு கூட்டம், ஜூன் 3 – 5 வரை நடைபெறும்.
