புதுடில்லி: ஜனாதிபதி திரவுபதி முர்முவின் மேற்கு வங்க பயணம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி – முதல்வர் மம்தா பானர்ஜி இடையேயான வார்த்தை மோதல் தீவிரமடைந்து உள்ளது.
முதல்வர் மம்தா, இரு ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படத்தை வெளியிட்டு, பிரதமர் மோடியை விமர்சித்த நிலையில், அதற்கு பா.ஜ., உண்மை சரிபார்ப்பு குழு பதிலடி கொடுத்துள்ளது.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, தமிழகத்துடன் சேர்த்து விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
அதிருப்தி
டார்ஜிலிங் மாவட்டத்தின் கோஷாய்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், ஜனாதிபதி திரவுபதி முர்மு சமீபத்தில் பங்கேற்றார்.
முதலில் இந்நிகழ்ச்சி, பிதான் நகரில் நடப்பதாக இருந்தது. பின், பாதுகாப்பு காரணங்களுக்காக கோஷாய்பூருக்கு மாற்றப்பட்டது. இதற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அதிருப்தி தெரிவித்தார்.
இது, தேசிய அளவில் பேசு பொருளானது. ஜனாதிபதியை திரிணமுல் காங்., அரசு அவமதித்து விட்டதாக பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இதற்கு பதிலளித்த முதல்வர் மம்தா பானர்ஜி, ‘சட்டசபை தேர்தல் நேரத்தில் பா.ஜ., துாண்டுதலின்படி, ஜனாதிபதி முர்மு அரசியல் செய்கிறார்’ என்றார்.
கொல்கட்டாவில், தேர்தல் கமிஷனை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டுஉள்ள முதல்வர் மம்தா பானர்ஜி, நேற்று முன்தினம், பழைய புகைப்படம் ஒன்றை காண்பித்தார்.
அதில், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி, பிரதமர் மோடி ஆகியோர் நாற்காலியில் அமர்ந்திருப்பதும், அருகில், ஜனாதிபதி திரவுபதி முர்மு நிற்கும் காட்சி இருந்தது.
‘பாரத ரத்னா’
இது குறித்து பேசிய அவர், ‘இந்த புகைப்படத்தை பாருங்கள். ஜனாதிபதி முர்மு நிற்கும் போது, பிரதமர் மோடி அமர்ந்திருக்கிறார். இது மரியாதையா? இது போல நாங்கள் செய்ததில்லை.
‘ஜனாதிபதியை அவமதிக்கும் கலாசாரம் பா.ஜ.,விடம் தான் உள்ளது. அது, அக்கட்சியின் ரத்தத்திலேயே ஊறியது’ என்றார்.
இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பா.ஜ., உண்மை சரிபார்ப்பு குழு சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவு:
மம்தா பானர்ஜி காண்பித்த புகைப்படம், 2024 மார்ச் 31ல், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானிக்கு, அவரது வீட்டில், நாட்டின் உயரிய விருதான, ‘பாரத ரத்னா’ வழங்கப்பட்ட போது எடுக்கப்பட்டது.
வெட்கக்கேடானது
மரபின்படி, ஜனாதிபதி எழுந்து நின்று விருது வழங்கும் போது, மற்றவர்கள் அமர்ந்திருக்க வேண்டும்.
அதன்படியே, ஜனாதிபதி முர்மு, அத்வானிக்கு விருது வழங்கும் போது பிரதமர் மோடி அமர்ந்திருந்தார். இதில், எந்த மரபு மீறலும் இல்லை. ஓர் அற்புதமான நிகழ்வை அற்ப அரசியலுக்காக திரிணமுல் காங்., பயன்படுத்துவது வெட்கக்கேடானது.
தவறான தகவல்களை பரப்புவதற்கு பதில், மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியின் கண்ணியத்தை அக்கட்சி மதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளது.
