தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இத்தகைய சூழலில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை இந்தியத் தேர்தல் ஆணையம் ஆய்வு செய்தது. அதன் அடிப்படையில் ஐ.ஏ.எஸ். மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. அதன்படி தமிழகத்தின் தலைமைச் செயலாளர் ந. முருகானந்தம் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் புதிய தலைமைச் செயலாளராக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான சாய்குமாரை நியமித்து இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது . அதேபோன்று லஞ்ச ஒழிப்புத்துறை டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதமும் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருந்தார். மேலும் சந்தீப் மிட்டல் தமிழ்நாடு அரசின் ஆயுதப்படை மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவின் காவல்துறை தலைமை இயக்குநராக (டி.ஜி.பி.) நியமிக்கப்பட்டுள்ளார்.
தேர்தல் ஆணையத்தின் இந்த செயலுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தேர்தல் ஆணையத்திற்கு திமுக எம்பி டி.ஆர்.பாலு கடிதம் அனுப்பியுள்ளார். இந்நிலையில் தற்பொழுது தமிழக உள்துறைச் செயலாளரையும் தேர்தல் ஆணையம் மாற்றி உத்தரவிட்டுள்ளது. தமிழக உள்துறைச் செயலாளர் நீரஜ்குமார் மாற்றப்பட்டு புதிய உள்துறைச் செயலாளராக மணிவாசனை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இன்று மாலை 5 மணிக்குள் அவர் உள்துறைச் செயலாளராக பணியை ஏற்க தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள உத்தரவில் தெரிவித்துள்ளது.
