புதுடில்லி: மதுரை மேலூர் தொகுதிக்கு மட்டும் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அங்கு மாணிக்கம் தாகூர் மாமனார் போட்டியிட திமுக ஆட்சேபனை தெரிவிப்பதே இதற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என தவெக கூட்டணிக்கு அழைத்தால் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சட்டசபை தேர்தலில் அக்கட்சியுடன் கூட்டணி அமைக்க வேண்டும் என முயற்சி செய்தனர். அது தொடர்பாக திமுக காங்கிரஸ் நிர்வாகிகள் வெளிப்படையாக விமர்சனம் செய்தனர். மாணிக்கம் தாகூர் வெளிப்படையாகவே திமுகவை விமர்சித்து வந்தார்.மதுரையில் திமுக எம்எல்ஏ பூத் ஏஜன்ட் கூட ஆள் இல்லை. முதல்வர் ஸ்டாலின் இல்லையென்றால் இண்டி கூட்டணி இல்லை என விமர்சனம் செய்தார். இதற்கு எம்பி மாணிக்கம் தாகூர் எதிர்ப்பு தெரிவித்து தளபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தளபதி தொகுதியான மதுரை வடக்கில் இம்முறை மாணிக்கம் தாகூர் தலைமையில் நடந்த தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன் பிறகும், திமுகவுக்கு நெருக்கடி அளிக்கும் வகையில் பேசினார். அந்த தொகுதியை மாணிக்கம் தாகூர், தனது மாமனரான ரவிச்சந்திரனுக்காக கேட்டதாக அப்போது காங்கிரசார் மத்தியில் பேசப்பட்டது. ரவிச்சந்திரன் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு அதிமுக வேட்பாளரிடம் தோல்வி அடைந்தவர் ஆவார்.
ஆனால், திமுக – காங்கிரஸ் கூட்டணி உறுதியான பிறகு மாணிக்கம் தாகூர் அமைதியானார். தொகுதி பங்கீட்டில் மதுரை வடக்கு தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க திமுக மறுத்துவிட்டது. கடந்த முறையை போல மேலூர் தொகுதியை ஒதுக்கியது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர், தேர்தல் மேலாண்மை, ஒருங்கிணைப்பு குழு தலைவர் பொறுப்பில் இருந்து மாணிக்கம் தாகூர் விலகினார். இதன் பின்னணியில் தனது ஆதரவாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கவில்லை என்ற அதிருப்தியே காரணம்.
இந்நிலையில் காங்கிரஸ் 27 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. ஆனால், மேலூர் தொகுதிக்கு மட்டும் வேட்பாளரை அறிவிக்கவில்லை.இத்தொகுதியில் மாணிக்கம் தாகூரின் மாமனரான ரவிச்சந்திரன் இந்த முறையும் போட்டியிட முயற்சி செய்துள்ளார். ஆனால், மாணிக்கம் தாகூர் மீது அதிருப்தியில் இருக்கும் திமுக ரவிச்சந்திரனுக்கு சீட் வழங்க ஆட்சேபனை தெரிவித்து வருவதாக தெரியவந்துள்ளது.
