மே.வங்கத்தில் லடாய்: லோக்சபாவில், 'நண்பேன்டா!' திடீரென ஒட்டிக்கொண்ட காங்கிரஸ் – திரிணமுல்

பிரதமர் மோடியையும், மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசையும் பார்லிமென்டில் எதிர்க்கும் நோக்கில், காங்கிரஸ் கட்சியுடன் திரிணமுல் காங்கிரஸ் மீண்டும் கைகோர்த்துள்ளதாக, அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, தமிழகத்தை போல் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.

மம்தா வாதம்

இதையடுத்து, எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியை தேர்தல் கமிஷன் மேற்கொண்டு வருகிறது.

இதற்கு, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி, ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். சமீபத்தில் எஸ்.ஐ.ஆர்., பணியால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் டில்லிக்கு சென்ற அவர், தலைமை தேர்தல் கமிஷனரை சந்தித்து முறையிட்டார்.

இதைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் எஸ்.ஐ.ஆர்., பணிகளுக்கு எதிராக மம்தா பானர்ஜியே ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். இது, தேசிய அளவில் பேசு பொருளானது.

இதற்கிடையே, பார்லிமென்டில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, லோக்சபாவில் கடந்த 4ம் தேதி விவாதம் நடைபெற்றது.

இதற்கு முன்னதாக, காங்., தலைவரும் ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்கே தலைமையில், பார்லிமென்ட் வளாகத்தில் உள்ள அவரது அறையில், எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் கூட்டம் நடைபெற்றது.

நெருக்கம்

இக்கூட்டத்தில், திரிணமுல் காங்.,கைச் சேர்ந்த எம்.பி.,யும் லோக்சபா துணைத்தலைவருமான சதாப்தி ராய் பங்கேற்றார். நீண்ட காலத்திற்குப்பின், காங்கிரஸ் சார்பில் கூட்டப்பட்ட கூட்டத்தில், திரிணமுல் காங்., பங்கேற்றுள்ளது.

அதன்பின் லோக்சபாவிலும், இரு கட்சியினருக்கு இடையே நெருக்கம் அதிகரித்து இருப்பது கண்கூடாக தெரிந்தது.

இதற்கு ஏற்ப, லோக்சபா எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல், தன் இருக்கையை விட்டு எழுந்து, திரிணமுல் எம்.பி.,க்களின் இருக்கைக்கு அருகே சென்று அவ்வப்போது உரையாடி வந்தார்.

மாநில அளவில் இரு கட்சிகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டிருந்தாலும், பார்லிமென்டில் பா.ஜ.,வை எதிர்க்க மெகா கூட்டணி தொடரும் என, மம்தா பானர்ஜி தன் கட்சியினருக்கு அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சமீபத்திய அவரது டில்லி பயணத்தைத் தொடர்ந்து, இரு கட்சிகளுக்கும் இடையே நெருக்கம் அதிகரித்துள்ளதையும் அரசியல் வல்லுனர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இதற்கு ஏற்ப, பார்லிமென்டில் எதிர்க்கட்சியினர் நடத்தும் போரட்டங்களின்போது, திரிணமுல் காங்., எம்.பி.,க்களும் சபையின் மையப்பகுதிக்கு சென்று எதிர்ப்பை பதிவுசெய்து வருகின்றனர்.

போராட்டம்

குறிப்பாக, லோக்சபாவில் ராகுலை பேச அனுமதிக்காத நிகழ்வை கண்டித்து, காங்கிரஸ் எம்.பி.,க்களுடன் இணைந்து திரிணமுல் காங்., – எம்.பி.,க்களும் போராட்டத்தில் குதித்து தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

மத்தியில் ஆளும் பா.ஜ.,வுக்கு எதிரான இத்தகைய போராட்டம், மாநில சட்டசபை தேர்தலுக்கு கைகொடுக்கும் என, மம்தா பானர்ஜி கருதுகிறார்.

– நமது சிறப்பு நிருபர் –

Source link