சென்னை: ”தேர்தல் முறைகேடுகள் குறித்த புகார்களை, தேர்தல் கமிஷனின் மொபைல் போன் செயலி வாயிலாக தெரிவிக்க முன் வர வேண்டும்,” என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்தார்.
சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் கூறியதாவது:
தேர்தல் விதி மீறல் தொடர்பாக, பொதுமக்கள் புகார் அளிக்க, தேர்தல் கமிஷன் சார்பில், ‘cVIGIL’ மொபைல் செயலி உருவாக்கப்பட்டு உள்ளது. இதை பயன்படுத்தி, பொதுமக்கள் தேர்தல் விதிமீறல்களை, படம் பிடித்து அனுப்ப வேண்டும். புகார் அனுப்புவோர் குறித்து ரகசியம் காக்கப்படும்.
அதிக தேர்தல் செலவு செய்யும் மாநிலம் என்ற பெயர், தமிழகத்திற்கு ஏற்கனவே உள்ளது. மத்திய அரசின் ஏஜன்சி வாயிலாக, அவற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, மார்ச் 26ம் தேதி வரை, கால அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
புதிதாக வினியோகம் செய்யப்பட உள்ள, வாக்காளர் தகவல் சீட்டின் மேல் பகுதியில், வாக்காளரின் பாகம் எண் உள்ளிட்ட விபரங்கள், தனியாக கட்டமிட்டு காட்டப்பட்டு இருக்கும். இதனால், அதை முன்பு போல் தேடி கண்டுபிடிக்க தேவையில்லை.
பள்ளிகள் தவிர, அடுக்குமாடி குடியிருப்புகளிலும், ஓட்டுச்சாவடிகள் அமைக்க, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மூன்று நாட்கள் வரை, தேர்தல் கமிஷனுக்கு இடம் ஒதுக்கி தர வேண்டும் என்பதால், பலரும் ஒப்புதல் தராமல் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள அறிக்கை:
அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் வாக்காளர்கள், தங்கள் துறையில் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு அலுவலர்கள் வாயிலாக, தபால் ஓட்டு செலுத்த விண்ணப்பிக்கலாம்.
தீயணைப்பு, மக்கள் நல்வாழ்வு, மின்சாரம், போக்குவரத்து, ஆம்புலன்ஸ் சேவை, விமான போக்குவரத்து, அரசு போக்குவரத்து கழகங்கள் போனறவை இந்த வசதியின் கீழ் வருகின்றன. தேர்தல் பணியில் ஈடுபடும் பத்திரிகையாளர்களும், தபால் ஓட்டு செலுத்த தகுதியுடையவர்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
