பெங்களூரு: பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், கைதிகள் மொபைல் போன் பயன்படுத்தும் வீடியோ வெளியாகி, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, மூன்று வார்டன்கள், ‘சஸ்பெண்ட்’ செய்யப் பட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என, 4,000 பேர் அடைக்கப் பட்டுள்ளனர்.
இந்நிலையில், கடந்த 27ம் தேதி சிறைக்குள் ஒரு அறையில் இரு கைதிகள் கும்பல் மொபைல் போனில், ‘நெட்பிளிக்ஸ்’ மூலம் படம் பார்த்து உள்ளனர். இதை ஒரு கைதி மொபைல் போனில் வீடியோ எடுத்தார்.
வீடியோ எடுப்பது தெரிந்தும், மொபைல் போன் பார்த்து கொண்டிருந்த கைதிகளில் ஒருவர், ‘இந்த சிறையில் பணம் கொடுத்தால் என்ன வேண்டும் என்றாலும் கிடைக்கும்; எங்களுக்கு மொபைல் போன் கொடுத்ததே சிறை துறை டி.ஜி.பி., அலோக்குமார் தான்’ என்று சிரித்தபடியே கூறுகிறார்.
இன்னொரு கைதி, ‘நாளை ஐ.பி.எல்., போட்டிகள் துவங்குகின்றன. இம்முறையும் கோப்பை பெங்களூரு அணிக்கு தான்’ என்று கூறுகிறார்.
இந்த வீடியோ, நேற்று காலை சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற் படுத்தியது.
வீடியோ எடுக்கப் பட்டது சிறையின் 9வது பிளாக் அறை என்று தெரிந்ததும், அந்த அறையில் சிறை காவலர்கள் சோதனை நடத்தினர். ஆனால், மொபைல் போன் சிக்கவில்லை.
கைதிகளிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போது, வடிகால் குழாய்க்குள் பால் பாக்கெட்டில் சுற்றி வைக்கப்பட்டு இருந்த மூன்று மொபைல் போன்களை, கைதி ஒருவர் எடுத்து கொடுத்தார். வீடியோவில் இருந்த கைதிகளை, சிறை ஊழியர்கள் அடையாளம் கண்டனர்.
சிறை கண்காணிப்பாளர் அன்ஷு குமார் அளித்த புகாரில், 10 கைதிகள் மீது, பரப்பன அக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அடைக்கப் பட்டனர்.
பணியில் அலட்சியமாக இருந்த வார்டன்கள் சிவானந்த் கார்லபட்டி, நிரஞ்சன் காமத், ஹனுமந்தப்பா ஆகிய மூவர், சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.
