புதுடில்லி: ‘நவீன காலத்தில் கையில் ‘மொபைல் போன்’ வைத்திருக்கும் ஒவ்வொருவரும் தங்களை ஊடகவியலாளராக கருதி, சமூக வலைதளங்களில் வீடியோக்களை வெளியிடுவது, நியாயமான விசாரணைக்கு பெரும் சவாலாக இருக்கிறது’ என சுப்ரீம்கோர்ட் கவலை தெரிவித்துள்ளது.
பாதிப்பு
ஒரு குற்றச்சம்பவம் நிகழ்ந்தவுடன், குற்றவாளிகளாக கருதப்படுவோரை போலீசார் கைது செய்து, அவர்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுகின்றனர். இது மக்கள் மனதில் ஒருதலைபட்சமான கருத்தை விதைக்கிறது.
கைதானவரின் கண்ணியத்தையும் பாதிக்கிறது. எனவே, போலீசார் சமூக வலைதளங்களில் குற்றஞ்சாட்டப்பட்டவர் பற்றிய வீடியோக்களை பதிவிட தடை விதிக்கக் கோரி, ஹேமேந்திர படேல் என்பவர் சுப்ரீம்கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்தார்.சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் விபுல் எம்.பன்சோலி அடங்கிய அமர்வில், இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: ஒரு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர் பற்றி ஊடகங்களிடம் போலீசார் தெரிவிக்கும்போது, அதில் எந்த பாரபட்சமும் காட்டக் கூடாது. ஒருதலைபட்சமான விளக்கங்கள், மக்கள் மனதில், குற்றஞ்சாட்டப்பட்டவரே குற்றவாளி என்ற பிம்பத்தை ஏற்படுத்தி விடும்.
எனவே, ஊடகங்களிடம் விளக்கம் தரும் விவகாரத்தில் போலீசார் நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். ஏனெனில், குற்றம் நிரூபிக்கப்படும் வரை அவர் நிரபராதியோ, குற்றவாளியோ அல்ல.
போலீசாரை கட்டுப் படுத்த கையேடுகள் இருக்கின்றன. டி.வி.,க்கள் கூட கட்டுக்கோப்புடன் செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால், சமூக வலைதளங்களை எப்படி கட்டுப்படுத்துவது. மொபைல் போன் வைத்திருக்கும் ஒவ்வொருவருமே ஊடகவியலாளராக செயல்படுகின்றனர்.
அதில் பலர், தங்களது வாகனங்களில் ஊடகவியலாளர் என்ற ஸ்டிக்கரை துணிச்சலாக ஒட்டிக் கொண்டு சுயலாபத்திற்காகவும், சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக்கவும் வலம் வருகின்றனர்.
அவகாசம்
போலீசார், ஊடகங்களை எப்படி கையாள வேண்டும் என்பதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை வகுக்க மூன்று மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
வரும் ஏப்ரலில் அந்த வழிகாட்டுதல்கள் அமலுக்கு வந்து விடும். எனவே, போலீசார், ஊடகங்கள், சமூகவலைதளங்கள் ஆகிய மூன்றையும் உள்ளடக்கிய விரிவான மனுவாக தயாரித்து ஏப்ரலுக்கு பின் தாக்கல் செய்தால் சிறப்பாக இருக்கும் என கருதுகிறோம்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதையடுத்து, அந்த மனு வாபஸ் பெறப்பட்டது.
