மோகன் பகான் வெற்றி: ஐ.எஸ்.எல்., கால்பந்தில் அசத்தல்

கோல்கட்டா: ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில் மோகன் பகான் அணி 2-0 என, கேரளாவை வீழ்த்தியது.

அனைத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) சார்பில், 2014 முதல் இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் நடத்தப்படுகிறது. இதுவரை 11 சீசன் முடிந்துள்ளன. கடந்த ஆண்டு டிச. 8ல் முடிந்த 15 ஆண்டு கால ஒப்பந்தம் புதுப்பிக்கப்படாததால், 12வது சீசன் துவங்குவதில் இழுபறி ஏற்பட்டது.

மத்திய அரசின் தலையீட்டின் கீழ் 12வது சீசன் துவங்கியது. பைனல், மே 17ல் நடக்கவுள்ளது. மொத்தம் 14 அணிகள் பங்கேற்கின்றன. கோல்கட்டாவில் நடந்த முதல் லீக் போட்டியில், ‘நடப்பு சாம்பியன்’ மோகன் பகான், கேரளா அணிகள் மோதின. ஆட்டத்தின் 36வது நிமிடத்தில் ஜேமி மெக்லாரன் ஒரு கோல் அடிக்க, முதல் பாதி முடிவில் மோகன் பகான் அணி 1-0 என முன்னிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியின் ‘ஸ்டாப்பேஜ்’ நேரத்தில் (90+7வது நிமிடம்) மோகன் பகான் அணியின் டாம் ஆல்டிரெட் ஒரு கோல் அடித்தார். கடைசி வரை போராடிய கேரளா அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் மோகன் பகான் அணி 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.

கோவாவில் நடந்த மற்றொரு லீக் போட்டியில் இன்டர் காஷி, கோவா அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்டநேர முடிவில் 1-1 என ‘டிரா’ ஆனது.

Source link