வாஷிங்டன்: அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்த காலம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், அணு ஆயுதங்களுக்கான வரம்புகளை அதிகரிக்க வேண்டும் என்று ரஷ்யா கோரிக்கை விடுத்தது. ஆனால், இதனை ஏற்க அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுத்துள்ளார்.
கடந்த 2010ம் ஆண்டு அமெரிக்கா – ரஷ்யா இடையே ‘நியூ ஸ்டார்ட்’ என்று பெயரில் அணு ஆயுத ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி, இரு நாடுகளும் தலா 1,550 அணு ஆயுதங்களை மட்டுமே வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டோடு இந்த ஒப்பந்தம் காலாவதியானது. ஆனால், மேலும் 5 ஆண்டுகளுக்கு இரு நாடுகளும் ஒப்பந்தத்தை நீட்டித்துக் கொண்டன.
இந்த சூழலில் இருநாடுகளுக்கு இடையிலான அணு ஆயுத ஒப்பந்தம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனால், இந்த ஒப்பந்தத்தை வரம்பு நீட்டிப்போடு மீண்டும் தொடர ரஷ்யா கோரிக்கை விடுத்தது. ஆனால், அமெரிக்க அதிபர் டிரம்ப் ரஷ்யாவின் இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்து விட்டார்.
இது குறித்து அவர் வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில்; அமெரிக்கா உலகின் மிக வலிமையான நாடு. எனது முதல் பதவிக்காலத்திலேயே, புதிய அணு ஆயுதங்கள் உட்பட எங்களின் ராணுவத்தை முழுமையாக மறுசீரமைத்தேன். நான் ‘ஸ்பேஸ் போர்ஸ்’ அமைப்பை உருவாக்கினேன். தற்போதும் ராணுவத்தின் வலிமையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறேன்.
2ம் உலகப்போரின் போது பயன்படுத்தப்பட்ட அயோவா, மிசூரி, அலபாமா போன்ற போர்க்கப்பல்களை விட 100 மடங்கு அதிக சக்தி கொண்ட கப்பல்களை கப்பற்படையில் இணைத்து வருகிறோம். இந்தியா – பாகிஸ்தான், ஈரான் – இஸ்ரேல் மற்றும் ரஷ்யா – உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே அணுசக்தி போர் ஏற்படாமல் தடுத்து நிறுத்தினேன்.
அமெரிக்காவின் மோசமான பேச்சுவார்த்தையால் உருவாக்கப்பட்ட ‘நியூ ஸ்டார்ட்’ ஒப்பந்தத்தை நீட்டிப்பதற்கு பதிலாக, எதிர்காலத்தில் நீண்ட மற்றும் நவீனமயமாக்கப்பட்ட ஒப்பந்தத்தை உருவாக்க நாம் அனுபவமிக்க அணுசக்தி நிபுணர்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும், இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனா அணு ஆயுத வளர்ச்சியில் கவனம் செலுத்தி வருவது அமெரிக்க அதிபர் டிரம்புக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், இந்த ஒப்பந்தத்தில் சீனாவும் இருக்க வேண்டும் என்று டிரம்ப் விரும்புகிறார். ஆனால், இதற்கு சீனா மறுப்பு தெரிவித்து வருகிறது.
