விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’. இப்படத்தில் க்ரித்தி ஷெட்டி கதாநாயகியாகவும் எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். மேலும் நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பிரதீப் ரங்கநாதனுக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
லலித் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி ஹைதராபாத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பேசிய விக்னேஷ் சிவன், “இந்த படத்தை ரிலீஸ் செய்ய நிறைய உழைப்பை போட்டுள்ளோம். பிரதீப் ரங்கநாதனுக்கு என்னுடைய முதல் நன்றி. ஏனென்றால் இந்தப் படம் தொடங்கியதே எனக்கு ஒரு பெரிய கதை. அது என் தனிப்பட்டகதை. ஆனால் அவர்மீது எனக்குள்ள நன்றியுணர்வு என் வாழ்க்கை முழுவதும் இருக்கும். அந்தக் காலகட்டத்தில் என்மீது நம்பிக்கை வைத்ததற்கு நன்றி. என்மீது நீங்கள் வைத்த அந்த நம்பிக்கைக்கு நான் கைம்மாறு செய்யக்கூடிய ஒரே வழி, உங்களுக்கு ஒரு நல்ல படத்தைக் கொடுப்பது மட்டுமே. அந்தப் படம் சில சாதனைகளைப் படைப்பதாகவும், அந்தச் சாதனைகளை முறியடிக்கப் பிறருக்குச் சற்று காலம் பிடிக்கும் வகையிலும் அமைய வேண்டும். அதற்காக நான் முயற்சி செய்திருக்கிறேன். இது என்னுடைய சிறந்த படமாக இருக்கும்.
க்ரித்தி ஷெட்டி, எனக்கு என் ‘தீமா’ கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்தப் படம் குறித்து நீங்களும் மகிழ்ச்சியடைவீர்கள் என்று நம்புகிறேன். அடுத்து, அனிருத்துக்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஏனென்றால் என் வாழ்நாள் முழுவதும் அவர் எனக்கு உறுதுணையாகவும் தூணாகவும் இருந்து வருகிறார். என் இரண்டாவது படம் தொடங்கி இன்றுவரை ஒரு நண்பராகவும், நல்ல நேரங்களிலும் மோசமான நேரங்களிலும் நான் எப்போதுமே தேடி செல்லும் ஒரு நபராகவும் அவர் திகழ்கிறார். எப்போதும் எனக்குத் துணையாக நின்று ஆதரவளிப்பதை அவர் உறுதி செய்திருக்கிறார். இந்தப் படத்திற்கு இப்போது உருவாகியிருக்கும் எதிர்பார்ப்புக்கு முழுக்க முழுக்க அவருடைய இசைதான் காரணம்” என்றார்.
