'மோசமான முறையில் நடந்துகொண்டார்' – இயக்குநர் பாலியல் தொல்லை அளித்ததாக மோனாலிசா போஸ்லே குற்றச்சாட்டு

பிரயாக்ராஜ் மகா கும்பமேளா மூலம் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே வைரல் நட்சத்திரமானார். கேரளத்தில் சினிமா படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ள அவர், தனது காதலனான மகாராஷ்டிராவைச் சேர்ந்த முஹம்மது ஃபர்மான் கானை திருமணம் செய்துகொண்டார். பெற்றோர் எதிர்த்ததால் திருவனந்தபுரம், தம்பானூர் காவல் நிலையத்தில் காதலன் முஹம்மது ஃபர்மான் கானுடன் தஞ்சம் அடைந்தார். பின்னர் பெற்றோர் எதிர்ப்பையும் மீறி கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் முன்னிலையில் பூவாறில் வைத்து திருமணம் செய்துகொண்டனர். அப்போது மோனலிசாவுக்கு 18 வயது பூர்த்தியடையவில்லை என விவாதம் எழுந்தது. ஆதாரங்களின் அடிப்படையில், அவருக்கு 18 வயது ஆகவில்லை என்றும், அதனால் திருமணம் செய்துகொள்வதற்கான சட்டப்பூர்வ வயது அவருக்கு இல்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், லவ் ஜிகாத் என்ற குற்றச்சாட்டும் கூறப்பட்டது. மகாகும்பமேளா சமயத்தில் மோனாலிசா போஸ்லேவுக்கு 16 வயதுதான் ஆகியிருந்தது எனவும், அவரது ஆவணங்களில் திருத்தம் செய்திருக்கலாம் எனவும், மோனலிசா போஸ்லே-வுக்கு 18 வயது ஆகவில்லை என்றும், அவரது வயது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என சினிமா இயக்குநர் சனோஜ் மிஸ்ரா அந்தச் சமயத்தில் தெரிவித்திருந்தார்.

மோனாலிசா போஸ்லே – முஹம்மது ஃபர்மான் கான் திருமணம்

இந்த நிலையில் மோனாலிசா போஸ்லே கொச்சியில் தன்னுடைய கணவர் முஹம்மது ஃபர்மான்கானுடன் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “எனது முதல் திரைப்படமான ‘தி டைரி ஆஃப் மணிப்பூர்’ சினிமா இயக்குநர் சனோஜ் மிஸ்ரா படப்பிடிப்புத் தளத்தில் என் உடலில் பலமுறை தவறான நோக்கத்தில் கைவைத்தார். நேபாளம் மற்றும் டேராடூன் ஆகிய இடங்களில் வைத்து பலமுறை என்னிடம் மோசமான முறையில் நடந்துகொண்டார். அன்றே இது பற்றி எனது குடும்பத்தினரிடம் தெரிவித்தேன். அது எனது முதல் படம் என்பதால், அவர்கள் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர்களுக்குப் பணம் மட்டுமே பிரதானமாக இருந்தது. எனக்கு 18 வயது பூர்த்தியாகும் முன்பே இது போன்ற துயரமான நிகழ்வுகள் நடந்தன.

மோனாலிசா என்ற பெயரைக் கேட்டாலே தனக்கு வெட்கமாக இருப்பதாகவும், அவர் என் படத்தில் நடிக்க மாட்டார் என்றும் சனோஜ் மிஸ்ரா கூறுகிறார். ஆனால், நான் அவரது சினிமாவில் நடிக்க விரும்பவில்லை. அவர் மிகவும் மோசமானவர். அவருடைய பெயரைச் சொல்லவே எனக்கு வெட்கமாக இருக்கிறது. சினிமாவின் பெயரில் சிறுமிகளிடம்கூட அவர் தவறாக நடந்துகொள்கிறார். இந்த சினிமாவில் நடிக்க வைக்கிறேன், அந்த சினிமாவில் நடிக்க வைக்கிறேன் என சினிமாவின் பெயரால் அவர் மிகவும் மோசமான செயல்களை செய்கிறார். பல இடங்களில் எங்களது போஸ்டர்கள் எரிக்கப்படுகின்றன. பல இடங்களிலிருந்தும் எங்களுக்கு கொலை மிரட்டல்கள் வருகின்றன” எனக் கூறி கண்ணீர் விட்டு அழுதார், மோனாலிசா போஸ்லே.

கொச்சியில் செய்தியாளர் சந்திப்பின்போது அழுத மோனாலிசா போஸ்லே

மோனலிசா போஸ்லேவுக்கு 18 வயது பூர்த்தி ஆகும் முன்பே அவரை திருமணம் செய்ததாக முஹம்மது ஃபர்மான் கானை கைதுசெய்ய மகாராஷ்டிரா காவல்துறை முயல்வதாகவும், அதன் பின்னணியில் சினிமா இயக்குநர் சனோஜ் மிஸ்ரா இருப்பதாகவும் இந்தச் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர்கள் தெரிவித்தனர். இது பற்றி முஹம்மது ஃபர்மான் கான் கூறுகையில், “நாங்கள் சொந்த ஊருக்குச் செல்ல விரும்பினோம். அங்கு பிரச்னைகள் ஏற்படும் என்ற அச்சத்தின் காரணமாக கேரளாவிலேயே தங்க முடிவு செய்துள்ளோம். ஓர் இந்துவும் ஒரு முஸ்லிமும் காதலிப்பதும், திருமணம் செய்துகொள்வதும் இது முதன்முறை அல்ல. நான் அனைத்து மதங்களையும் பழக்கவழக்கங்களையும் மதிக்கும் நபர். கைது நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றத்தில் இடைக்கால தடை உத்தரவு பெற்றுள்ளோம்” என்றார்.

Source link