வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில், பாமக சார்பில் ஏ.கே. மூர்த்தி, தலித் எழில்மலை போன்றவர்கள் மத்திய அமைச்சராக பணியாற்றினர். இந்த உயர்வு, பாமகவுக்கு தேசிய அரசியலில் புதிய அடையாளத்தை உருவாக்கியது. அது ஒரு சாதி அடிப்படையிலான பிராந்தியக் கட்சியாக மட்டுமே இல்லை, தேசிய அளவில் பேசப்படும் சக்தி என்றும் நிரூபித்தது. அப்போதைய காலகட்டத்தில், மத்தியில் கூட்டணி அரசியல் கோலோச்சியதால், மத்திய அரசுக்கு நம்பகமான பிராந்திய கூட்டாளிகள் தேவைப்பட்டன. இதனால்,பாமக-வின் பேரம் பேசும் திறனும் உயர்ந்தது.
அடுத்து, 2004 முதல் 2009 வரையிலான மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில், அன்புமணி மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருந்தார். அவருடன் ஆர். வேலு, மத்திய ரயில்வே துறை இணை அமைச்சராக பணியாற்றினார்.
மத்திய ஆட்சியில் பங்குகொண்டதால் பாமக, கிராமப்புற சுகாதாரம், கல்வி, இடஒதுக்கீட்டு உரிமைகள், சமூக நீதி போன்ற துறைகளில் கொள்கை விவாதங்களை வடிவமைக்கும் வாய்ப்பைப் பெற்றது. தன் வாக்குத்தளத்தை, நிலையாக கூட்டணி கட்சிகளுக்கு மாற்றிக் கொடுக்கக்கூடிய, அதேசமயம் குறிப்பிடத்தக்க அமைச்சகப் பொறுப்புகளை பெறக்கூடிய ஒழுங்குமுறை கூட்டாளி என தன்னை அந்த காலத்தில் பாமக நிலைநிறுத்திக் கொண்டது.

2006–2011: பாமகவின் உச்ச அரசியல் செல்வாக்கு
2006 முதல் 2011 வரையிலான காலகட்டம், மாநில அரசியலில் பாமகவுக்கு மிக அதிகமான செல்வாக்கைப் பெற்ற உச்சகட்ட காலமாகப் பார்க்கப்படுகிறது. 2006 தேர்தலில் கருணாநிதி தலைமையிலான திமுக 96 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைத்த நிலையில், அந்த ஆட்சியை நிலைநிறுத்த காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவு அவசியமானதாக இருந்தது. அந்த கூட்டணியில் மிக முக்கியமான துணை சக்தியாக இருந்தது பாமக. அந்தத் தேர்தலில் கட்சி 31 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களை வென்ற பாமக, திமுக அரசை வெளியில் இருந்து ஆதரித்தது. இது பாமகவின் மாநில அரசியல் பயணத்தில் ஒரு பெரிய முன்னேற்றமாக அமைந்தது.
இந்த 18 எம்.எல்.ஏ-க்களே அரசின் நிலைத்தன்மையை நிர்ணயிக்கும் `பேலன்ஸ் ஆஃப் பவர்’ ஆக இருந்தனர். சட்டமன்றத்தில் மசோதாக்களை நிறைவேற்றுவதறகும், கூட்டணி அழுத்தங்களை சமாளிப்பதற்கும், அரசியல் சவால்களை எதிர்கொள்வதற்கும் பல கட்டங்களிலும் திமுக அரசு, பாமகவின் ஆதரவை நம்பியே இருந்தது. இதனால், ஆட்சியில் இடம்பெறாவிட்டாலும், பல்வேறு முக்கிய துறைகளில் பாமகவினர் நினைத்ததை சாதித்துக்கொள்ளும் அளவுக்கு செல்வாக்குடன் வலம் வந்தனர். இந்த காலம், பாமகவை ஒரு வாக்குத்தளம் கொண்ட கட்சியாக மட்டும் அல்லாது, மாநில அரசியலில் “கிங் மேக்கர்” ஆகவும் காட்டியது.

இத்தகைய வெற்றிகளுக்குப் பிறகும், பாமகவின் செல்வாக்கு நீண்ட காலத்துக்கு நீடிக்கவில்லை. பல்வேறு காரணங்களால், அக்கட்சிக்கு சரிவு தொடங்கியது. கட்சி முழுமையாக வன்னியர் வாக்குத்தளத்தைச் சார்ந்துவிட்டதால், குறிப்பிட்ட சாதிக்கான கட்சி என்கிற முத்திரை அழுத்தமாக பதிந்து, இதர சமூகங்களில் விரிவடையும் திறன் குறைந்தது. அடிக்கடி மாறிய கூட்டணிகள், சமூகப்படிநிலைச் சிக்கல்கள் ஆகியவை கட்சியின் முன்னேற்றத்தைக் குறைத்தன. குறிப்பாக 2012 ல் தொடங்கிய, பட்டியலின மக்களுக்கு எதிரான ராமதாஸின் விமர்சனங்கள், இடைநிலை சாதிகளை ஒருங்கிணைத்து நடத்திய சில கூட்டங்கள் போன்றவையும் அக்கட்சிக்கு எதிரான அம்சங்களில் ஒன்றாக மாறிப்போயின.
பாமகவின் மாநிலங்களவை எம்.பி-யாக இருந்த அன்புமணி, 2014-ல் ஆட்சிக்கு வந்த மோடி தலைமையிலான மத்திய அரசு கொண்டுவந்த சில சர்ச்சைக்குரிய மசோதாக்கள் வெற்றி பெறும் வகையில் ஆதரவாக வாக்களித்தது அல்லது வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது, அவை நடவடிக்கைகளில் அதிகம் பங்கேற்காதது போன்றவை கடும் விமர்சனத்துக்கு உள்ளாகின. இவற்றின் தாக்கம், அடுத்தடுத்து வந்த தேர்தல்களில் எதிரொலித்தன.
2016 தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிட்ட நிலையில், ஒரு இடமும் அகட்சிக்கு கிடைக்கவில்லை. அதே சமயம், அந்தத் தேர்தலில் திமுகவுக்கு வடக்கு மற்றும் வடமேற்கு மாவட்டங்களில் மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ஏற்பட்ட தோல்விக்கு, பாமக பிரித்த வாக்குகளே முக்கிய காரணமாக அமைந்தது. 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில், அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற பாமகவுக்கு 5 இடங்கள் கிடைத்தன. 2019 மற்றும் 2024 நாடாளுமன்ற தேர்தல்களிலும் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை.
இவற்றுக்கெல்லாம் மேலாக, கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரின் மகன் அன்புமணி ஆகியோருக்கிடையேயான உள்கட்சி மோதலால் பாமகவில் ஏற்பட்டுள்ள பிளவு, அக்கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
