புதுடில்லி: ‘ரூபே’ கார்டு மற்றும் ‘பீம் ஆப்’ பரிவர்த்தனைகளுக்கான செயல்பாட்டு செலவுகளை ஈடுகட்ட புதிய மாதிரியை உருவாக்க வேண்டும் என்று நிதி தொடர்பான பார்லி., குழு வலியுறுத்தியுள்ளது.
அக்குழு கூறியுள்ளதாவது:
ரூபே டெபிட் கார்டுகள், குறைந்த மதிப்பிலான பீம் ஆப் வாயிலான வர்த்தக பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க, அவற்றின் செயல்பாட்டு செலவுகளை மத்திய அரசே ஏற்றுக்கொள்ள முடிவெடுத்தது. அதன்படி, 2026 – -27ம் ஆண்டுக்காக 2,000 கோடி ரூபாயை ஒதுக்கீடு செய்தது.
மேற்கண்ட பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படும்போது, வர்த்தகர்கள் செலுத்த வேண்டிய ‘எம்.டி.ஆர்.,’ எனும் சிறிய கட்டண சுமையை அரசு ஏற்றுக்கொள்வதே அத்திட்டத்தின் நோக்கம் ஆகும். ஆனால், ரூபே டெபிட் கார்டுகள், குறைந்த மதிப்பிலான பீம் ஆப் பரிவர்த்தனைகளை செயல்படுத்தும்போது கூடுதல் செலவு பிடிக்கிறது. அரசின் ஒதுக்கீட்டில் 11 சதவீத செலவை மட்டுமே சமாளிக்க முடிகிறது.
மேலும், வர்த்தகர்கள் வழக்கமான கட்டணத்தை வங்கிகளுக்கு செலுத்துவதாக இருந்தால், அதில் 14 சதவீத அளவுக்கே அரசின் ஒதுக்கீட்டுத்தொகை ஈடு செய்கிறது. எனவே, மீதமுள்ள செலவை வங்கிகள், யு.பி.ஐ., செயலிகள் ஏற்க வேண்டியதாக உள்ளது.
சிறு நகரங்களில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை ஊக்குவிக்க ஊக்கத்தொகை, சலுகை திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இக்குழு ஏற்கிறது.
அதே வேளையில், யு.பி.ஐ., பரிவர்த்தனைகளின் செயல்பாட்டு செலவுகளை மத்திய அரசால் மட்டுமே ஈடு செய்ய முடியாது.
எனவே, இத்துறையே தனது செலவுகளை ஏற்றுக்கொள்ளும் வகையில் சுய சார்பு மாதிரி ஒன்றை மத்திய நிதியமைச்சகத்தின் நிதிச்சேவைகள் துறை கண்டறிய வேண்டும்.
இவ்வாறு அக்குழு கூறியுள்ளது.
இந்தியாவின் யு.பி.ஐ., முறை எதிர்வரும் ஆண்டுகளில் பிரமாண்ட வளர்ச்சி காணும். மாதம் ஒன்றுக்கு 10,000 கோடி முதல் 15,000 கோடி பரிவர்த்தனைகள் நடக்கும் எனவும், 60 கோடி புதிய பயனாளர்கள் உருவாகுவர் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.
