யூடியூப் டூ ஓடிடி; ஆமீர் கான் எடுத்த முடிவு!

ஆமிர்கான் நடிப்பில் கடந்த ஆண்டு ஜூனில் வெளியான படம் ‘சித்தாரே ஜமீன் பர்’. இப்படத்தை ‘கல்யாண சமையல் சாதம்’ பட இயக்குநர் ஆர்.எஸ்.பிரசன்னா இயக்கியிருந்தார். ஆமிர் கானுக்கு ஜோடியாக ஜெனிலியா நடித்திருந்த இப்படத்தை ஆமீர்கானே தயாரித்தும் இருந்தார். சங்கர் மகாதேவன் உள்ளிட்ட மூன்று பேர் இசையமைத்திருந்த இப்படம் ஸ்பேனிஷில் வெளியான ‘சாம்பியன்ஸ்’ படத்தின் ரீமேக்காகும். 

ஒரு பாஸ்கெட் பால் கோச், தான் செய்த சட்ட ஒழுங்கு தவறுக்காக மாற்றுத்திறனாளி குழந்தைகள் அடங்கிய டீமிற்கு பாஸ்கெட் பால் பயிற்சி கொடுக்க நியமிக்கப்படுகிறார். அந்த டீமை அவர் ஜெயிக்க வைத்தாரா இல்லையா என்பதே படத்தின் கதை. இதில் பயிற்சி கொடுக்கும் பாஸ்கெட் பால் கோச்சாக ஆமிர்கான் நடித்துள்ளார். இப்படம் இந்தியை தவிர்த்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகியிருந்தது. மற்ற மொழிகளை தாண்டி இந்தியில் நல்ல வரவேற்பை இப்படம் உலகம் முழுவதும் ரூ.250 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்பட்டது. 

திரையரங்க வெளியீட்டுக்குப் பின் ஓடிடி-யில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட இப்படம் யூடியூபில் ஆகஸ்ட் 1ஆம் தேதி வெளியானது. அதாவது ஆமீர்கானின் யூடியூப் சேனலில் பணம் கட்டி பார்க்குமாறு வெளியானது. இது குறித்து பேசிய ஆமிர் கான், “சினிமா அனைவரையும் நியாயமான மற்றும் மலிவு விலையில் சென்றடைய வேண்டும். இது தான் என் கனவு” என்றிருந்தார். இந்த நிலையில் இப்படத்தை ஓடிடி தளத்திற்கு தற்போது கொடுத்துள்ளார். அதன்படி சோனி லிவ் ஓடிடி தளத்தில் ஏப்ரல் 3ஆம் தேதி இப்படம் வெளியாகிறது. திரையரங்கில் வெளியான 9 மாதங்கள் கழித்து இப்படம் வெளியாகிறது. பொதுவாக 4 வாரங்களில் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 

இது குறித்து பேசிய அவர், “எனக்கு ஒருபோதும் இருவேறு மனநிலைகள் இருந்ததில்லை. நான் எப்போதும் ஒரு ஓடிடி வெளியீட்டையே விரும்புவேன். ஆனால், திரையரங்கு வெளியீட்டிற்குப் பிறகு அது சீக்கிரம் நடக்கக்கூடாது என நினைக்கிறேன். நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் அனைவரும் இப்படத்தை ரசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். திரையரங்குகளில் இப்படத்தைப் பார்க்காதவர்கள் இப்போது சோனி லிவ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்” என்றார்.

இப்படத்துடன் ‘சிதாரோன் கே சித்தாரே’ எனும் ஆவணப்படமும் வெளியாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இது படத்தில் இடம் பெற்ற மாற்றுத்திறனாளிகளின் பெற்றோர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய அவர், “இது மிகவும் சிறப்பான ஒரு படைப்பு. ஏனென்றால், இது உண்மையான சூப்பர்ஸ்டார்களைப் பற்றிப் பேசுகிறது. ‘சீதாரே’ என்பவர்கள் நட்சத்திரங்கள்தான், ஆனால், அவர்களை வளர்த்துப் பராமரித்த அந்த 10 கலைஞர்களின் பெற்றோர்களே நிஜ வாழ்க்கையின் உண்மையான சூப்பர்ஸ்டார்கள். எனவே, பெற்றோர்களே உண்மையான சூப்பர்ஸ்டார்கள் எனும் உண்மையை இப்படம் மிக அழுத்தமாக எடுத்துரைக்கிறது” என்றார். டெல்லியில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் சிவப்புக் கம்பள நிகழ்வின்போது ஆமிர் கான் இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Source link